×

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்பி நேரில் ஆய்வு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தனர் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, ஏப்.9: திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர், எஸ்பி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 6ம் தேதி நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி மற்றும் ஆரணி தச்சூர் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி வாக்கு எண்ணும் மையத்தில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், செங்கம் ஆகிய தொகுதிகளுக்கும், ஆரணி தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்படுகிறது.

அதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி காமிரா கண்காணிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு காமிரா பதிவுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி அரவிந்த் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பாதுபாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். மேலும், பணியில் உள்ளோர் மற்றும் முகவர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.தொடர்ச்சியாக 24 மணி நேரமும், கண்காணிப்பு பணி நடைபெற வேண்டும் எனவும், 8 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்பு வீரர்கள் பணி மாற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...