×

வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் அகற்றம் அரசு கார்களும் துறை அலுவலர்களிடம் ஒப்படைப்பு சட்டமன்ற தேர்தல் நிறைவையொட்டி

வேலூர், ஏப்.9: சட்டமன்ற தேர்தலையொட்டி வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் அகற்றப்பட்டது. அரசு வாகனங்களும் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நன்னடத்தை அமல்படுத்தப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கவும், அதை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படை, 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், 3 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மூலமாக தனித்தனியாக கார்கள் வழங்கப்பட்டது.இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் சுழற்சி முறையில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.இதற்கிடையே ஒரே இடத்தில் இருந்தபடி சோதனையில் ஈடுபடுவதாக தவிர்க்கும் வகையிலும், அவர்கள் இருக்கும் இடம், நேரம் போன்றவை குறித்த தகவல்கள் கண்காணிக்க அவர்களது வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி அனைத்து குழுவினரின் வாகனங்ளுக்கும் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அங்கிருந்து 24 மணி நேரம் அவர்களது வாகனங்களை கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்ற வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் 6ம் தேதியுடன் தேர்தல் பணிகள் முடிவடைந்தது. இதனால் பறக்கும்ப்படை, நிலைக்கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அனைத்து குழுகளும் கலைக்கப்பட்டது. அதில் பணிபுரிந்தவர்கள் அவர்களின் பணியிடத்திற்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்கள் அந்தந்த துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றும் தனியார் வாடகை வாகனங்கள் திரும்ப அனுப்பப்பட்டது. அந்த வாகனங்களில் பயன்படுத்திய ஜிபிஎஸ் கருவிகள் அகற்றப்பட்டு மாவட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


Tags : Government ,Assembly elections ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்