திருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருவாரூர், ஏப்.8: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து அறையை பூட்டி சீல் வைக்கப்பட்ட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவாரூர் அருகே கிடாரம்கொண்டானில் உள்ள திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 4 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குசாவடி மையங்களிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு முதல் அதிகாலை வரையில் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரியின் தனி தனி கட்டிடங்களில் ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதிக்கும் என தனி தனியாக வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என அந்தந்த அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறைகளுக்கு மிக அருகிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வகையில் ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனியே கொண்டு வர தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் அதுவரையில் இந்த வாக்குகள் எண்ணும் மையத்திற்கு மாவட்ட எஸ்பி கயல்விழி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கொண்டு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்றுமுன்தினம் 336 வாக்கு மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. இதில் 76.74 வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும் மண்டல அலுவலர்கள் வாக்கு பெட்டிகளை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர். பின்னர் இரவு 11 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை வரை வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குபதிவு தொடர்பான ஆவணங்களையும் பாதுகாப்பாக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி ஓட்டு எண்ணும் மையமான திருவாரூர் அரசு கலைக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா தெரிவித்தார்.

Related Stories:

>