×

தா.பழூர் காவல் நிலையம் முன் மக்கள் சாலை மறியல் போராட்டம்

தா.பழூர், ஏப். 8: இரவில் வீட்டின் மீது கற்களை வீசியோர் மீது நடவடிக்கை கோரி தா.பழூர் காவல்நிலையம் முன் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் பூங்குன்றன். இவரது வீட்டின் அருகே இருந்த திருநாராயணசாமி வீட்டில் நேற்று முன்தினம் அதிக சத்தத்துடன் பாட்டு வைத்துள்ளனர். அருகில் உள்ள வீடுகளுக்கு தொந்தரவாக இருப்பதாகவும் அதை கொஞ்சம் குறைத்து வைக்க பூங்குன்றன் கூறியுள்ளார். அதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர். வீசியதில் வீட்டின் ஜன்னல், கண்ணாடிகள் மற்றும் வாடகைகார் கண்ணாடிகள் உடைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் தா.பழூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மர்ம நபர்கள் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேற்று காலையில் கற்கள் வீசிய கார்த்தி மற்றும் அவரது நண்பரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டதாக கூறுகின்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தா.பழூர் காவல் நிலையம் முன்பு சுமார் 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஜெயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இடங்கண்ணி கீழ்த் தெருவை சேர்ந்த நாராயண சாமி (50), வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாக்கியராஜ் (33) , கும்பகோணம், முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திக் (26), தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, தங்கமால்புரம் பகுதியைச் சேர்ந்த தேன்மணி மகன் பிரபு (24) ஆகியோரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dhaka police station ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது