திருமானூர் ஒன்றியம் விளாகத்தில் நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் மறியல்

அரியலூர்,ஏப்.8: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாகம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இதில் விளாகம், ஆலம்பாடி மேட்டுத்தெரு, கோவில்எசனை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயிர் நெல்லை கொடுத்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விளாகம் கிராம விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் விளாகம் - ஆலம்பாடி மேட்டுத்தெரு சாலை வழியாக வந்த லாரியை மறித்து சாலையில் நெல்லைக் கொட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தலை காரணம் காட்டி மாத கணக்கில் நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதாகவும், இதனால் கொட்டி வைக்கப்பட்ட நெல்லை பகலில் ஆடு மாடுகளும் இரவில் பன்றிகளால் சேதமடைமடைவதாகவும், மற்ற பணிகளுக்கு செல்ல முடியாமல் பல நாட்களாக காவல் இருப்பதால் பிற பணிகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கனூர் எஸ்ஐ நந்தகுமார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்கள் படும் இன்னல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து நெல் கொள்முதல் அதிகாரிகளிடம் பேசிய போலீசார் நாளை(இன்று) காலை முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலையில் நெல்லை கொட்டினர்

Related Stories:

>