நாகை, மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல்வைப்பு

நாகை, ஏப்.8: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது. நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 861 வாக்குச் சாவடிகளில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. ஒரு சில வாக்குச்சாவடிகள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. அதே போல் வாக்குப்பதிவும் ஒருசில மையங்கள் தவிர மற்ற மையங்களில் எல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு முடிந்தது. இதனால் மண்டல அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து வந்தனர். இவ்வாறு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று காலை வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து கொண்டிருந்தது.

அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையமான நாகை இஜிஎஸ்பிள்ளை கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரிக்கு வந்தவுடன் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து முகவர்கள் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் சீல் வைக்கப்பட்டதை கலெக்டர் பிரவீன்பிநாயர் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு முகவர்கள் மற்றும் பணியாளர்களை தவிர வேறு யாரும் வர முடியாத அளவிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>