×

போடி கொட்டக்குடி ஆற்றில் தரமில்லாமல் நடக்கும் தடுப்பணை சீரமைப்பு பொதுமக்கள் புகார்

போடி, ஏப். 8: போடி கொட்டக்குடி ஆற்றில் பிள்ளையார் தடுப்பணை சீரமைப்பு பணி தரமில்லாமல் அவசர கதியில் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். போடி முந்தல் சாலையில் கொட்டக்குடி ஆற்று–்குள் மூக்கறை பிள்ளையார் என்ற அணை பிள்ளையார் மெகா தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து தண்ணீர் நீண்ட அருவியாக கொட்டுவதால் இப்பகுதி மக்கள் குளிக்க, துணிகளை துவைக்க அதிகளவில் இங்கு வருவர். மேலும் இந்த அணையில் தேங்கும் தண்ணீரால் சுற்றுவட்டார நிலங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் கிடைக்க பெரிதும் கைகொடுக்கிறது. இதனால் கிணறுகளிலும், ஆழ்குழாய்களிலும் பாசன நீர் தடையின்றி கிடைப்பதால் தென்னை, வாழை, நெல், இலவு, கரும்பு, மா, சப்போட்டா, வெள்ளை- மக்கா சோளம் உள்ளிட்டவை பயிரிட்டு நல்ல விளைச்சல் கண்டு வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் இங்கு காட்டாற்று வெள்ளம் பெரியளவில் சீறிப்பாயும். இதனால் அச்சமயம் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு போடப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணை கடந்த 10 ஆண்டுகளாக கற்கள் பெயர்நது குண்டும், குழியுமாகவும், பதுங்கு குழிகளாகவும் மாறி அபாய நிலையில் காணப்பட்டது. இதனால் குளிக்க வரும் சிறுவர்கள் அடிக்கடி அணை குழிக்குள் சிக்கி பலியாகி வந்தனர். இதனால் இப்பகுதி மக்கள், விவசாயிகள் அணையை புதுப்பிக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர், அணைக்கரைப்பட்டி பஞ்சாயத்தினரிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே அணை நிலைமை மேலும் மோசமானது. இதையடுத்து அரசு குடிமராமத்து பணியில் ரூ.4.43 கோடி ஒதுக்கி அணையை சீரமைக்கும் பணிகளை கடந்த 2 மாதங்களாக செய்து வருகிறது. இதற்காக அணை பகுதியில் உள்ள சிறு மரங்கள், செடி- கொடிகளை அகற்றியும் மற்றும் இடுக்கலான பாறை கற்களை உடைத்தும் பாதை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் அணை முன்புறம் தண்ணீர் வடிந்து கடக்கும் இடங்களில் கற்கள் பெயர்ந்து பொந்துகளாக கிடக்கும் பகுதிகளை இடித்து புதுப்பிக்காமல், அதில் அப்படியே கருங்கற்களை முட்டு கொடுத்து சிமெண்ட்டால் பூசி வருகின்றனர். மேலும் அப்படியே 3 அடுக்கு நீண்ட வடிகால் தடுப்புகளும் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பிள்ளையார் தடுப்பணையில் ரூ.4 கோடியில் நடந்து வரும் சீரமைப்பு பணிகள் அவசர கதியில் நடந்து வருகிறது. பேஸ் மட்டத்திலிருந்து இரும்பு கம்பிகளால் உறுதியாக கான்கிரீட்டாகவும் தரமானதாக அமைக்க வேண்டும். அப்போதுதான் அணைக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Bodi Kotakudi river ,
× RELATED போடி கொட்டக்குடி ஆற்றில் தரமில்லாமல்...