7 தொகுதி வாக்கு இயந்திரங்கள் இரண்டு மையங்களில் பூட்டி சீல் வைப்பு காலை 8 மணி வரை வந்த பெட்டிகள்

விருதுநகர், ஏப்.8: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் 2,370 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டத்தில் 73.69 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் அதிகபட்சமாக திருச்சுழியில் 77.44 சதவீதமும், குறைந்த பட்சமாக சிவகாசியில் 70 சதவீத வாக்குகளும் பதிவாகின. 7 சட்டமன்ற தொகுதிகளின் 2,370 வாக்குச்சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணி துவங்கி நேற்று காலை 8 மணி வரை விருதுநகர் வாக்கு எண்ணிக்கை மையமான ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிக்கு வந்து சேர்ந்தன. ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி வாக்குப்பெட்டிகளும், ஸ்ரீவித்யா கலை அறிவியல் கல்லூரியில் சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதி வாக்குப்பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து சீல் வைப்பது தொடர்பாக அந்தந்த தொகுதி வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து 7 தொகுதிகளின் வாக்குப்பெட்டிகள் தனித்தனியாக பாதுகாப்பு அறைகளில் வைத்து பொதுப்பார்வையாளர், வேட்பாளர்கள் முன்னிலையில் தொகுதி தேர்தல் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதி வாக்குப்பெட்டிகள் பொதுப்பார்வையாளர் பினித்தா பெக்கு முன்னிலையிலும், திருச்சுழி தொகுதி வாக்குப்பெட்டிகள் பொதுப்பார்வையாளர் சுரேந்திர பிரசாந்த் சிங் முன்னிலையிலும், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் தொகுதி வாக்கு பெட்டிகள் பொதுப்பார்வையாளர் தேவேந்திர குமார் சிங் குஷ்வா    ஹா முன்னிலையிலும், சாத்தூர், சிவகாசி தொகுதி வாக்குகள் பெட்டிகள் பொதுப்பார்வையாளர் பிரபான்ஷூ குமார் ஸ்ரீவஸ்தவ் முன்னிலையிலும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.கடந்த காலங்களில் வாக்கு எண்ணிக்கை வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் மற்றும் செந்திக்குமார நாடார் கல்லூரிகளில் நடைபெற்றன. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விசாலமான அறைகள் தேவைப்பட்டதால், விருதுநகர் சிவகாசி ரோட்டில் உள்ள ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2ம் தேதி வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>