நான்கு தொகுதியில் ஆண்களை விட 53 ஆயிரம் பெண்கள் அதிகமாக வாக்களிப்பு

ராமநாதபுரம், ஏப்.8:  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 53 ஆயிரத்து 302 பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 189 பெண்கள், 5 லட்சத்து 79 ஆயிரத்து 908 ஆண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 63 பேர் என 11 லட்சத்து 65 ஆயிரத்து 160 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கலைநிகழ்ச்சிகள், மணல் சிற்பம், படகு மூலம் சென்று மீனவ மகளிர், இளம் வாக்காளர்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் நூறு சதவிகித வாக்குப்பதிவிற்கு நடவடிக்கைகள் எடுத்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் நிறைவடைந்த வாக்குப்பதிவு இறுதி நிலவரப்படி, பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 84 ஆயிரத்து 933 ஆண்கள், 95 ஆயிரத்து 333 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 269 பேர் வாக்களித்தனர். திருவாடானை தொகுதியில் 92 ஆயிரத்து 10 ஆண்கள், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 14 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 2 லட்சத்து 25 பேர் வாக்களித்தனர். ராமநாதபுரம் தொகுதியில் 96 ஆயிரத்து 556 ஆண்கள், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 569 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 2 லட்சத்து 8 ஆயிரத்து 126 பேர் வாக்களித்தனர்.

முதுகுளத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 198 ஆண்கள், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 83 பெண்கள் என 2 லட்சத்து 18 ஆயிரத்து 281 பேர் வாக்களித்தனர். நான்கு தொகுதிகளிலும் இறுதி நிலவரப்படி 3 லட்சத்து 76 ஆயிரத்து 697 ஆண்கள், 4 லட்சத்து 29 ஆயிரத்து 999 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 5 என 8 லட்சத்து 6 ஆயிரத்து 701 பேர் வாக்களித்தனர். 4 தொகுதிகளிலும் ஆண்களை விட 53 ஆயிரத்து 302 பெண்கள் அதிகம் வாக்களித்தனர். ஆண்களை விட பரமக்குடி தொகுதியில் 10 ஆயிரத்து 400 பெண்கள், திருவாடானை தொகுதியில் 16 ஆயிரத்து 4 பெண்கள், ராமநாதபுரம் தொகுதியில் 15 ஆயிரத்து 13 பெண்கள், முதுகுளத்தூர் தொகுதியில் 11 ஆயிரத்து 885 பெண்கள் வாக்களித்துள்ளனர். பெண்களே அதிகம் வாக்களித்துள்ளதால் பெண் வாக்காளர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

Related Stories:

>