×

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 4 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு கேமரா மூலமும் கண்காணிப்பு

மதுரை, ஏப்.8: மதுரை மாவட்டத்தின் நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில்  3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. இதில் 3,856 வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடந்தன. தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. 300 மண்டல அலுவலர்கள் குழுவினர்  மண்டலம் வாரியாக இயந்திரங்களை சேகரித்து அந்தந்த வாக்கு எண்ணும்  மையங்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் கொண்டு வர துவங்கினர். கடைசியாக சோழவந்தான்,  திருமங்கலம், மேலூர் மற்றும் மதுரை மத்தி ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்கு இயந்திரங்கள் நேற்று காலை  7 மணியளவில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டன.

 மேலூர், மதுரை கிழக்கு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஒத்தக்கடையில் உள்ள வேளாண்மை கல்லூரியிலும், மதுரை வடக்கு, தெற்கு, மத்தி, மேற்கு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக்கல்லூரியிலும் நடைபெறுகிறது. இதேபோல், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியிலும், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை கீழக்குயில்குடியில் (நான்குவழிச்சாலை) அண்ணாபல்கலைக்கழகத்திலும் நடைபெறுகிறது.

வாக்குபதிவு இயந்திரங்கள் அந்தந்த மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில், வாக்குச்சாவடிகள் தோறும் பதிவான ஓட்டுகளின் விபரங்கள் குறித்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை செய்தனர். இதில் 90 சதவீதத்திற்கு மேல் பதிவான வாக்குச்சாவடிகள், அதேபோல் 40 சதவீதத்திற்கு குறைவாக பதிவான வாக்குச்சாவடிகள் குறித்து பரிசீலனை நடந்தது.

 பின்பு அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள்,  வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை பூட்டி சீல் வைத்தனர். வாக்கு இயந்திரம் உள்ள அறை மற்றும் முன்பு வளாகத்தில் 4 சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு, நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டது. இதனை கண்காணிக்க தனி கண்காணிப்பு  மையம் அமைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுவதால், மதுரையில் உள்ள 4 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் வாக்கு இயந்திரங்கள் உள்ள ‘இருப்பு அறை’க்கு துணை ராணுவ வீரர்கள் சுழற்சி முறையிலும், அடுத்த அடுக்காக தமிழக சிறப்பு காவல் படையும், மூன்றாவது அடுக்கில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வேட்பாளர்களின் முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 25 நாட்கள் தங்கி சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு