×

திமுக பூத் ஏஜென்டுக்கு சரமாரி வெட்டு போலீசாரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு

உத்திரமேரூர், ஏப். 8: திமுக பூத் ஏஜென்டுக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும்  எடுக்காததால் அப்பகுதி மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், உத்திரமேரூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம்  நடந்தது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருவானைகோயில் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது, திமுக இளைஞரணி நிர்வாகி மனோஜ்குமார் என்பவருக்கும்,  அதிமுக வாக்குச்சாவடி முகவருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அவர்களை  சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இரவு 7 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து, வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி  வைத்தனர். இந்த பணி இரவு 11 மணியளவில் முடிவடைந்தது. இதையடுத்து, திமுக முகவர் மனோஜ்குமார், சுமார் 11.30 மணியளவில் தனது  வீட்டுக்கு நடந்து  சென்றார். விச்சூர் பெரியகாலனி அருகே சென்றபோது, அதிமுக நிர்வாகிகள் சந்திரன், சிவா, சக்திவேல் ஆகியோர், மனோஜ்குமாரை மறித்து,  தகராறு செய்தனர். அதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால், மனோஜ்குமாரை சமாரியாக வெட்டினர். இதனால், ரத்த காயத்துடன் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். அதை கண்டதும், அவர்கள் தப்பிவிட்டனர். இதையடுத்து, படுகாயமடைந்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து படாளம் போலீசிக்கு  புகார் செய்யப்பட்டது.  ஆனால், போலீசார் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், சித்தனகாவூர் - ஒரகாட்டுபேட்டை சாலையில் நேற்று காலை திரண்டனர். அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். .  இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பு நிலவியது.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி