×

மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் மூடியில்லாமல் திறந்தே கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்

மாமல்லபுரம், ஏப். 8: மாமல்லபுரம் அருகே கழிவுநீர் செல்லும் கால்வாயில் மூடி அமைக்கப்படாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், இருளர் இன மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால், மூடி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துள்ளனர். மாமல்லபுரம் பேரூராட்சி பூஞ்சேரி கூட்ரோட்டில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி, 50க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும், இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் விடப்பட்டது. இதனால், அந்த பகுதியில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு மலேரியா, சிக்குன் குன்யா, டைபாய்டு உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்பட்டது. டெண்டர் தனியார் ஒப்பந்த நிறுவனம், கடந்த 5 மாதத்துக்கு முன்பு அங்கு மழைநீர் செல்ல கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி முடித்தது. இந்நிலையில், முடிக்கப்பட்ட கால்வாய்க்கு இதுவரை மூடி அமைக்கவில்லை. இதனால், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வயதான முதியவர்கள், சிறுவர்கள் அந்த கால்வாயை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும், அந்த கால்வாய் மீது அமர்ந்து விளையாடும் குழந்தைகள் அடிக்கடி அதில் விழுந்து காயமடைவது வாடிக்கையாகிவிட்டது. இதுவரை அந்த கால்வாயில் 2 முதியவர்கள், 5 குழந்தைகள் விழுந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள், குழந்தைகள், முதியோர்கள் நலனை கருத்தில் கொண்டு மிகப் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன், கால்வாய் பணியை ேமற்கொண்ட ஒப்பந்தம் நிறுவனத்தினரிடம், இந்த கால்வாயின் மீது விரைந்து மூடி அமைக்க உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Sewage canal ,Mamallapuram ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...