மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காற்றில் பறந்த மனுக்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

புழல், ஏப்.8: மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து, பொதுமக்கள் அளித்த மனுக்களை குவியல், குவியலாக போட்டு வைத்துள்ளனர். இந்த மனுக்கள் முறையாக பாதுகாக்கப்படுவது இல்லை. எனவே, இவை காற்றில் பறந்து வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புழல் பாலாஜி நகரில் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் மாதவரம், புழல், சூரப்பட்டு, புத்தாகரம் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்கின்றனர். இந்த மனுக்கள் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அதிகாரிகளின் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படாமல், குவியல்  குவியலாக கிடக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்ற தேர்தல் பணியை தொடர்ந்து, இந்த மனுக்கள் அனைத்தையும் வட்டாட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் குப்பையாக போட்டு வைத்துள்ளனர். இப்பகுதியில் பலத்த காற்று வீசும்போது, அந்த மனுக்கள் அனைத்தும் அதன் பின்புறமுள்ள நகர் பகுதிகளில் காற்றில் பறந்து வந்து சிதறி கிடக்கின்றன. இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சிலர், வெவ்வேறு கோரிக்கைகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுக்கள், சில நாட்களிலேயே அவர்களின் கைகளுக்கு காற்றில் பறந்து வந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, வட்டாட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் குவியல் குவியலாக இருக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories:

More
>