×

திருத்தணி முருகன் வீதியுலா கிராம மக்கள் உற்சாகம்

திருத்தணி, ஏப். 8: பட்டாபிராமபுரம் கிராமத்தில்,  திருத்தணி முருகன் நேற்று, வீதியுலா வந்ததால், கிராம பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும், பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து, நேற்று காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் படிகள் வழியாக நல்லாங்குளம் அருகே வந்தார். தொடர்ந்து, அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த, மாட்டு வண்டியில் உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, கோயில் சுமைதாரர்கள் மாட்டு வண்டியில், உற்சவர் முருகப் பெருமான், சித்துார் சாலை, புறவழிச்சாலை, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, காலை, 11:30 மணிக்கு, பட்டாபிராமபுரம் கிராம எல்லைக்கு சென்றடைந்தது. அங்கு கிராமமக்கள் மற்றும் இளைஞர்கள் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மதியம் 12:30 மணிக்கு, பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள குளக்கரையில், புதிதாக சீரமைக்கப்பட்ட மண்டபத்தில், உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அந்த மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, பால், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதியுலா முடிந்தவுடன், உற்சவர் மீண்டும் மலைக்கோயிலுக்கு சென்றடைந்தார்.

Tags : Thiruthani ,Murugan Veediula ,
× RELATED திருத்தணியில் வருமான வரித்துறை சோதனை!!