கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு சீல் வைப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.8: கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அன்று இரவு 9 மணி முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. அந்த வாக்கு எண்ணும் யைமத்தில் 6 சட்டசபைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டது. அந்த அறைகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு இயநதிரங்கள், கண்ட்ரோல் யூனிட், வாக்குப்பதிவை சரிபார்க்கும் இயந்திரம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கையெழுத்திட்ட சான்றிதழ் ஆகியவை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது.

அவற்றை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி, தேர்தல் பொது பார்வையாளர் சாரதிசென்சர்மா, திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன் எம்எல்ஏ., வேப்பனஹள்ளி முருகன் எம்எல்ஏ., பர்கூர் மதியழகன், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சந்திரமோகன், அமமுக கணேசகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில், அறையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டு சாவி கொண்டு பூட்டால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் வேட்பாளர்கள் கையெழுத்திட்ட பேப்பர், அந்த அறைக்கதவின் மேல் ஒட்டப்பட்டது. பின்னர் இரும்பு வலை கொண்ட கதவை அந்த அறையின் முன்பு வைத்து ஆணி அடிக்கப்பட்டது.

இதே போல், 6 சட்டசபைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களும், அந்தந்த அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஒவ்வொரு அறையையும், 2 கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கணக்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், சீல் வைக்கப்பட்டுள்ள அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>