×

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தினசரி 1276 லட்சம் லிட்டர் ஒனேக்கல் குடிநீர் விநியோகம்

தர்மபுரி, ஏப்.8:  கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம், தினசரி 1276 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் புளோரைடு என்ற நச்சுத்தன்மை வாய்ந்த உப்பு 7 மில்லி கிராம் வரை உள்ளது. இந்த தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு, கறை படிந்த பற்கள், முடக்குவாதம், மூட்டுவலி போன்ற உபாதைகளுக்கு ஆளாகினர். இந்த நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க, திமுக ஆட்சிக்காலத்தில் 2008ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, ₹1928.80 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். 2012ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. திட்டத்தை நிறைவேற்றாமல் அவசர கதியில் கடந்த 2013ம் மார்ச் 19ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகரப்பகுதி மற்றும் சில கிராமங்களில் மட்டும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் சென்றடைந்தது. ஊரக பகுதிகளில் இத்திட்டம் முழுமையாக சென்றடையவில்லை. இதனால் ஊரக பகுதிகளில் உள்ள கிராமமக்கள் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் கிடைக்காமல், ஆழ்துளை கிணறுகளை நம்பி இருந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளதால், ஆழ்துளை கிணறு மற்றும் கை பம்புகளில் தண்ணீர் அளவு குறைந்துவிட்டது. புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்தால், 600 அடிக்கு மேல் தான் தண்ணீர் கிடைக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீரை தேடி அலைய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தினசரி 1276 லட்சம் லிட்டர் தண்ணீர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உறிஞ்சு சுத்திகரித்து, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றில் தண்ணீர் வரத்து சரிந்தாலும், அதே அளவில் தண்ணீர் எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 400 கனஅடி தண்ணீர் வருகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையில் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது.

இதுகுறித்து ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘கோடைகாலம்  தொடங்கிய நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தினசரி 1276 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்கிறோம். தர்மபுரி மாவட்டத்திற்கு மட்டும் 591.6 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கிறோம். காவிரி ஆற்றில் சீராக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை துணி துவைக்க, குளிக்க பயன்படுத்தக்கூடாது. குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் தகவல் வந்தால், உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு