×

குமரியில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு விடிய, விடிய வந்திறங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைப்பு

நாகர்கோவில், ஏப்.8: குமரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திறங்கின. பின்னர் அந்தந்த அறைகளில் வைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 2ம் தேதி நடக்க இருக்கிறது. அதுவரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட உள்ளன. குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதி மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நாகர்கோவில் கோணம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அதே வளாகத்தில் உள்ள அரசு ெபாறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன. நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் 2,243 வாக்கு சாவடிகளில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நள்ளிரவு முதல் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
கோணம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் விளவங்கோடு, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும், அரசு பொறியியல் கல்லூரியில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் நாகர்கோவில், கன்னியாகுமரி, கிள்ளியூர், குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள், முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் வராண்டா முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் தங்குவதற்காக தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அந்த அறைகளில் இருந்தவாறு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளை முகவர்கள் பார்த்துக் கொண்டே இருக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக சென்றும் சீல் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்ய முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை  நடைபெறும் அறைகள், வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் என சுமார் 200  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகளும்  அமைக்கப்பட்டுள்ளன. 4 உயர் கோபுர கண்காணிப்பு டவர் அமைக்கப்பட்டுள்ளது. 24  மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பார்கள். இரவை பகலாக்கும்  வகையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தடையின்றி மின்சாரம்  வழங்கும் வகையில் தனி டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் சப்ளை  செய்யப்படுகிறது. ஜெனரேட்டர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணியை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அரவிந்த் ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் முதல் கட்டத்திலும், 2, 3 வது கட்டத்தில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும். சுமார் 1500 போலீசார் சுழற்சி முறையில் கண்காணிக்க  உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார்.  ஏ.டி.எஸ்.பி.ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் வேணுகோபால், பீட்டர் பால்துரை  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.கொசுத்தொல்லை, துர்நாற்றம்வாக்கு எண்ணிக்கை மையமான அரசினர் தொழில் நுட்ப கல்லூரியின் முன்புற பகுதியில் அலங்கார நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. செயல்படாமல் உள்ள இந்த நீரூற்றில் தற்போது தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் நிற்கும் போலீசார், துணை ராணுவத்தினர் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் அல்லது கல்லூரி நிர்வாகம் உடனடியாக, இதை தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Vidya ,Kumari ,
× RELATED குழந்தைகள் வித்யா யோகம் பெற என்ன செய்யலாம்?