×

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி குமரியில் மினி கிளினிக்கில் கொரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 138 ஆக உயர்வு

நாகர்கோவில், ஏப்.8: குமரி மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்கிலும் இனி கொரோனா தடுப்பூசி போடலாம். பொதுமக்களின் வசதிக்காக மையங்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாள் ேதாறும் இரட்டை இலக்கத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 40 ஐ தாண்டிய எண்ணிக்கை, நேற்று முன் தினம் 20 ஆனது. நாகர்கோவில் மாநகர பகுதியில் மட்டும் 10 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முக கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என தெரிகிறது.

இது தவிர பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாகவும், அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். மாவட்டம் முழுவதும் தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்திருக்கிறது. நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. குமரி மாவட்டத்தில் 55 ஆயிரத்து 705 பேர் முதற்கட்ட தடுப்பூசியையும், 7003 பேர் 2ம் கட்ட தடுப்பூசியையும் போட்டுள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக தடுப்பூசி  போடும் மையங்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அம்மா மினி கிளினிக்குகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது மாவட்டத்தில் உள்ள 41 அம்மா மினி கிளினிக்கிலும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கை (தனியார் மருத்துவமனைகள் உள்பட) 138 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Echo Kumari ,
× RELATED இரவு நேர ஊரடங்கு ரத்து எதிரொலி...