×

நீலகிரி வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படாத வண்ணம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

ஊட்டி, ஏப். 8: நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் செடி கொடிகள் காய்ந்துள்ள நிலையில், காட்டு தீ ஏற்படாத வண்ணம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொங்கல் பண்டிகை வரை நீடித்தது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் துவங்கிய பனிப்பொழிவு தாமதமானது. அதன் பின் ஜனவரி மாதம் இறுதியில் இருந்து பனிப்பொழிவு துவங்கியது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உறைப்பனியின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதன் காரணமாக தேயிலை செடிகள் கருகின. நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகள் கருகின. மரங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. இந்த சூழலில் அவ்வப்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டு லேசான மழை பெய்த போதும், போதுமான அளவிற்கு பெய்யவில்லை. தற்போது, பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது.

காட்டு தீ பாதிப்பை தவிர்க்கும் வகையில், வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீலகிரி வன கோட்டத்தை பொறுத்த வரை ஊட்டி தெற்கு, குந்தா, கோரக்குந்தா, நடுவட்டம், கோத்தகிரி, கவர்னர்சோலை, கட்டபெட்டு உள்ளிட்ட 11 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனங்களில் காட்டு தீ ஏற்பட்டால், தவிர்க்கும் வகையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதுதவிர வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமப்பகுதிகளில் காட்டு தீயால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ்கள் விநியோகம், வாகன பிரசாரம் உள்ளிட்டவை வனத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.    கோரக்குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட கேரளா எல்லையோர பகுதிகளில் இருந்து காட்டு தீ பரவுவதை தவிர்க்கும் வகையில், அப்பகுதியில் 6 மீட்டர் அகலத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்டு தீ ஏற்படாத வண்ணம் நாள் தோறும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இது பற்றி நீலகிரி வன கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ‘நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கிராமப்புறங்களில் வாகன பிரசாரம் மற்றும் ேநாட்டீஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் கால்நடை தீவனங்களுக்காக வனப்பகுதிகளுக்கு தீ வைப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையோர பகுதிகளில் தீ மூட்டி சமைப்பது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும். மீறி காட்டு தீ ஏற்படுத்துபவர்கள் மீது வனச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Tags : Nilgiris ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்