×

குடிநீர் வழங்கக்கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை

கூடலூர், ஏப்.8: குடிநீர் வழங்கக்கோரி கூடலூர் நகராட்சி அலுவலகத்தை மேல் கூடலூர் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 1, 2வது வார்டு பகுதியில் ஓவிஎச் நகர், குறிஞ்சி நகர், பாரதி நகர், கேகே நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு ஊட்டி சாலை வாட்டர் செட் பகுதி தடுப்பணையில் இருந்து குழாய் வழியாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்துள்ளதால் தண்ணீர் வினியோகம் 8 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இங்கு சாலை ஓரங்களில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே லாரி மூலம் தண்ணீர் வழங்கப்படுவதாகவும், உள் பகுதியில் உள்ளவர்கள் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதாகவும், வீடுகளுக்கு குழாய்கள் மூலமாக குடிநீர் வழங்கவும், நிரந்தரமாக குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று கோரி கடந்த வாரம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அப்போது அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும் உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தனர். இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிந்தும் நேற்று குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை  என்பதால் உடனடியாக தங்கள் பகுதிக்கு தண்ணீர் வினியோகத்தை சீரமைக்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி நேற்று சுமார் 50க்கும் மேற்பட்டோர் கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  

 தகவலறிந்த அங்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானம் கூறியும் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி பொதுமக்களிடம்  சம்பந்தப்பட்ட ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு கொடுத்து மோட்டார் பொருத்தி அதன் மூலம் குழாய்களில் தண்ணீர் வழங்கவும், தொடர்ந்து தடையின்றி தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Cuddalore Municipal Office ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி