×

பென்னாகரத்தில் பிடிபட்ட யானை முதுமலையில் ரகசியமாக விடுவிப்பு

ஊட்டி, ஏப். 8: தர்மபுரி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 20வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை முதுமலை வனப்பகுதியில் ரகசியமாக விடுவிக்கப்பட்டது.   தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள பதனவாடி காப்புக்காடு பகுதியில் சுமார் 20 வயதுள்ள ஆண் காட்டு யானை கடந்த 2 வாரங்களாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்று சேதப்படுத்தி வந்தது. இந்த யானையைக் காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விட வனத்துறை திட்டமிட்டது. நேற்று தர்மபுரி மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்குமார் தலைமையில், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியினை மேற்கொண்டனர். யானையை அடையாளம் கண்டபின், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

தொடர்ந்து பிரத்யேக லாரியில் கிரேன் உதவியுடன் யானை ஏற்றப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் யானை விடுவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், எங்கு விடுவிக்கப்பட உள்ளது என எந்த அறிவிப்பையும் வனத்துறை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், லாரியில் ஏற்றப்பட்ட யானை முதுமலையில் விடுவிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிகிறது. முதுமலையில் யானையை விடுவிப்பது வெளியில் தெரிந்தால் எதிர்ப்பு ஏழ வாய்ப்புள்ளதால், முதுமலைக்கு கொண்டு வரும் விவரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகளிடம் கேட்ட போது, எவ்வித பதிலும் அவர்கள் கூறவில்லை. இச்சூழலில் தர்மபுரியில் இருந்து லாரி மூலம் யானை நேற்று இரவு கோத்தகிரி வழியாக முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் நள்ளிரவில் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

Tags : Pennagaram ,Mudumalai ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...