×

நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விற்பனை மையம் ஏற்படுத்த வேண்டும்

ஊட்டி, ஏப். 8: நீலகிரியில் விளைய கூடிய பணப்பயிர்களான குறுமிளகு, இஞ்சி போன்றவற்றை சந்தை படுத்த அரசு சார்பில் ஒருங்கிணைந்த விற்பனை மையம் ஏற்படுத்த வேண்டும் என சிறு ,குறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.     நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கேரளா மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஏலக்காய், குறுமிளகு, கிராம்பு, இஞ்சி, காபி உள்ளிட்ட பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தேயிலை பயிர்கள் அதிகம் உள்ள போதும், தேயிலைக்கு தற்போது நிலையான விலை இல்லாத நிலையில் ேதயிலை செடிகளுக்கு இடையே ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஊடுபயிராக குறுமிளகு சாகுபடியும் நடைபெற்று வருகிறது. மேலும் தனியாகவும் பல ஏக்கர் பரப்பளவில் குருமிளகு, இஞ்சி, கிராம்பு போன்றவை பயிரிடப்படுகின்றன.

  இங்கு விளைவிக்கப்படும் குருமிளகு, இஞ்சி உள்ளிட்டவற்றிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் நீலகிரியில் சந்தைபடுத்த தனியாக எந்த சந்தையும் இல்லை. இதனால் விவசாயிகள் அருகாமையில் உள்ள அண்டை மாநிலமான கேரளாவை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.இங்கிருந்து கொண்டு செல்லப்படும் குருமிளகு, இஞ்சி போன்வற்றை கேரளா  மாநிலத்தில் குறைந்த விலைக்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய அளவு லாபம் கிடைப்பதில்லை. எனவே கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குருமிளகு, இஞ்சி விவசாயிகளின் நலன் கருதி அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்து சந்தைப்படுத்துவதற்காக நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விற்பனை மையம் ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Nilgiris district ,
× RELATED குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு...