×

உக்கடம் பெரியகுளத்தில் ஆகாய தாமரையால் படகு சவாரி பாதிப்பு

கோவை, ஏப்.8: கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. அலங்கார விளக்கு, ஐ லவ் கோவை, சிறுவர் பூங்கா, சைக்கிளிங் பாதை, வாக்கிங் ஏரியா என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. மேலும் சில பகுதிகளில் பணிகள் நடக்கிறது. குளத்திற்குள் மிதவை மேடை 200 மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடந்து சென்று படகு சவாரி செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன், குளத்தில் படகு சவாரி துவக்கி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு படகு இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது படகு சவாரி நடக்கும் பகுதி முழுவதும் ஆகாய தாமரை படர்ந்து கிடக்கிறது.

இதை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. பகல் நேரத்தில் குளக்கரையில் பொதுமக்களை அனுமதிப்பதில்லை. மாலை நேரத்தில் பொதுமக்கள், சிறுவர்கள் குளக்கரையை பயன்படுத்த அனுமதிக்கின்றனர். படகு சவாரிக்கு கட்டண நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை. படகு சவாரி ெதாடர்ந்து நடக்குமா?, முடக்கப்படுமா? என தெரியாத நிலையிருக்கிறது. குளத்தில் முழுவதும் கழிவு நீர் தேங்கியிருக்கிறது.இதில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டியிருக்கிறது. சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நீரை சுத்தம் செய்தால்தான் ஆகாய தாமரை படர்வதை தடுக்க முடியும். படகு பராமரிப்பு, இயக்கம் போன்றவற்றிக்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த திட்டமிடுதலும் மேற்கொள்ளவில்லை. தேர்தல் காரணமாக படகு திட்டம் முடக்கப்பட்டது. பணிகள் முழுவதும் முடிந்த பின்னரே படகு சவாரி மேற்கொள்ளப்படும் என மாநகராட்சியினர் தெரிவித்தனர்.

Tags : Ukkadam Periyakulam ,
× RELATED உக்கடம் பெரியகுளத்தில் 90 சதவீத ஸ்மார்ட் சிட்டி பணிகள் நிறைவு