10 தொகுதியில் ஓட்டுப்போடாத 9.76 லட்சம் வாக்காளர்கள்

கோவை, ஏப்.8: கோவை மாவட்டத்தில் 9.76 லட்சம் வாக்காளர்கள் அதாவது 31.68 சதவீதம் பேர் ஓட்டுப்போடாததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் கமிஷனர் அனைவரும் ஓட்டுப்போடவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்தது. சட்டமன்ற தேர்தலில் ஓட்டு சதவீதம் வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் ஓட்டு சதவீதம் வெகு குறைவாக இருப்பது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாவட்ட அளவில் 30,82,028 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 21,05,673 வாக்காளர்கள் அதாவது 68.32 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். 31.68 சதவீதம் பேர் அதாவது, 9,76,355 பேர் ஓட்டுப்போடவரவில்லை. ஆண் வாக்காளர்கள் 15,19,027 பேர் உள்ளனர். இவர்களில் 10,49,917 பேர் ஓட்டுப்போட்டனர். அதாவது 69.12 சதவீதம் பேர் ஓட்டுப்போட்டனர்.பெண் வாக்காளர்கள் 15,62,573 பேர் உள்ளனர். இவர்களில் 10,55,653 பேர் ஓட்டுப்போட்டனர். அதாவது 67.65 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டுப்போட்டனர். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் ஆண்களை காட்டிலும் பெண்கள் சுமார் 2 சதவீதம் குறைவாகவே ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். ஓட்டு சதவீதத்தை கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 0.16 சதவீதம் கூடியுள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் 5 ஆண்டிற்கு பிறகு நடக்கும் தேர்தலில், 80 முதல் 85 சதவீதம் வரை ஓட்டுப்பதிவாகும் என தேர்தல் பிரிவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். படித்தவர்கள், தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள கோவை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் உயரும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி போனது.

ஓட்டுப்பதிவு குறைய தொழில் நிறுவனங்கள் விடுமுறை விடாமல் விட்டது முக்கிய காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சனி அல்லது ஞாயிறு தினமாக இருந்திருந்தால் ஓட்டுப்பதிவு அதிகமாக இருந்திருக்கும். பணி நாட்களின்போது ஓட்டுப்பதிவு நடந்தது. சிலர் நிறுவனங்கள் ஓட்டுப,பதிவுக்காக விடுமுறை தரவில்லை. குறிப்பாக சில ஐடி நிறுவனங்கள் விடுமுறை வழங்கவில்லை என தெரிகிறது. கோவை மாவட்டத்தில் ஐடி நிறுவனங்களுக்காக வீட்டில் இருந்து பல ஆயிரம் இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். விடுமுறை இல்லாத நிலையில் இவர்கள் ஓட்டுப்போட செல்லவில்லை என தெரிகிறது. சில தொழில் நிறுவனங்கள் கேட்டை மூடி நிறுவனங்களை தொடர்ந்து நடத்தியதாக கூறப்படுகிறது. கட்டுமான தொழில் செய்யும் நிறுவனங்களும் விடுமுறை வழங்கவில்லை. இதனால்தான் தேர்தல் கமிஷன் எதிர்பார்த்த 10 முதல் 15 சதவீதம் வரையிலான ஓட்டுப்பதிவு குறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது. சிலர் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக ஓட்டுப்போட வரவில்லை என தெரிகிறது. தேர்தல் பிரிவினர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் அதிகபட்சமாக 77.28 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக கோவை வடக்கு தொகுதியில் 59.08 சதவீதம் பேரும் ஓட்டுப்போட்டனர். ஏன் அதிக வாக்காளர்கள் ஓட்டுப்போட வரவில்லை என தெரியவில்லை. இது வழக்கமான சராசரியான ஓட்டுப்பதிவுதான். எந்த ஓட்டுப்சாவடியிலும் மக்கள் ஓட்டுப்போடாமல் புறக்கணிக்கவில்லை’’ என்றனர்.

Related Stories:

>