×

ஸ்ட்ராங்க் ரூமுக்கு 3 அடுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வேட்பாளர்களின் முன்னிலையில் சீல் வைப்பு வேலூர் மாவட்டத்தில் சிசிடிவி பொருத்தி

வேலூர், ஏப்.8: வேலூர் மாவட்டத்தில் சிசிடிவி பொருத்தி ஸ்ட்ராங்க் ரூமுக்கு 3 அடுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வேட்பாளர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி. இரவு 7 மணி வரை நடந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,783 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. காட்பாடி தொகுதியில் 349, வேலூரில் 364, அணைக்கட்டில் 351, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 311, குடியாத்தம்(தனி) தொகுதியில் 408 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கிராமப்புறங்கள், நகர்புறங்கள் என்று அனைத்து பகுதிகளிலும் நீண்டவரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர்.மாவட்டத்தில் சிறுசிறு பிரச்னைகள் தவிர மற்ற இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வேலூர் மாவட்டத்தில் 73.76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக அணைக்கட்டு தொகுதியில் 77.11 சதவீதமும், கே.வி.குப்பத்தில்-76.46 சதவீதமும், காட்பாடியில்-74.03 சதவீதமும், குடியாத்தத்தில்- 71.94 சதவீதமும் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக வேலூரில்-69.14 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இந்நிலையில் வேலூர், அணைக்கட்டு ஆகிய 2 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையமாக வேலூர் பெரியார் அரசு பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி தொகுதிக்கு காட்பாடி சட்டக்கல்லூரியும், குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளுக்கு குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணப்படுகிறது. இதனால் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு கொண்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூத் வாரியாக சரிபார்க்கப்பட்டு உள்ளே எடுத்து சென்று அறையில் அடுக்கி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு தொடங்கிய பணி நேற்று காலை வரை விடியவிடிய நடந்தது.

இதற்கிடையில் பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 11 மணியளவில் வேலூர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்கள் கார்த்தியேகன், ஏ.பி.நநத்குமார், அதிமுக வேட்பாளர் அப்பு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம், எஸ்பி செல்வகுமார், தேர்தல் பொதுபார்வையாளர் முகமது அப்துல் அசிம் ஆகியோர் தலைமையில் சீல் வைத்தனர். அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், திமுக மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, அதிமுக மாவட்ட பொருளாளர் மூர்த்தி உட்பட பலர் இருந்தனர். இதேபோல் காட்பாடி சட்டக்கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோடி தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைத்தனர். குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் கே.வி.குப்பம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பானு, குடியாத்தம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் மன்சூர் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் வழங்கும் ஆலோசனையின்படி வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வாக்குபதிவு இயந்திரங்கள் வைப்பறை, தபால் வாக்குகள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை, தேர்தல் பார்வையாளர் அறை, வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணிக்கையை பார்வையிட செய்ய வேண்டிய பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அமரும் இடம், செய்தியாளர்கள் அறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் காற்று கூட புகாத வகையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா பரவலை தடுக்க, கூடுதலாக மேஜைகள் இடைவெளி விட்டும், முகவர்கள் தனியாக வந்து செல்லும் வழியும், காவல் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரம் கண்காணிக்கும் வகையில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் 24 மணி நேரமும் துணை ராணுவவீரர்கள், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தில் 100 போலீசார் வீதம் 300 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தை வந்து கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தவிதமான பிரச்னையின்றி பணியாற்ற அனைத்து போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Vellore ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...