தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு விடிய விடிய எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தூத்துக்குடி,ஏப்.8: தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையமான அரசு ெபாறியியல் கல்லூரிக்கு 6 தொகுதிகளிலிருந்தும் விடிய, விடிய வாக்கு பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 2,097 வாக்குச்சாவடிகளில் நேற்று முன் தினம் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும் வைக்கப்பட்ட பெட்டி மூடி முத்திரையிட்டு  சீல் வைக்கப்பட்டன.பல வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவான விவரம் கணக்கிடப்பட்டு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு எடுத்து வருவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டன. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துவர மொபைல் வாகனங்கள் பயன்படுத்தப்ட்டன. போலீஸ் பாதுகாப்புடன் வாக்குஎண்ணும் மையமான தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரி கட்டிடங்களுக்கு கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு தொகுதிக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் வந்ததும் அவை சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

வாக்குப்பெட்டிகள் காலை 8 மணியை தாண்டிய பின்னரும் வந்து இறங்கின. அவற்றை சரிபார்த்து அடுக்கிவைக்க மேலும் தாமதம் ஏற்பட்டது.

நேற்று காலை 9 மணி வரை மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குசாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்து சேர்ந்தன.இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கான அறைகளில்  வைக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிம்ரத் ஜீத் சிங் கலோன், டிஆர்ஓ கண்ணபிரான் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் அந்த அறைகள் தேர்தல் பார்வையாளர், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் திமுக வேட்பாளர் கீதாஜீவன், அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல்வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அந்த அறைகளின் முன்பு சிசிடிவி கேமராக்கள், வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு இணைய இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை மாநிலதேர்தல் ஆணையர், மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க வசதியாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போலீஸ், தொழில்பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அடுத்த மாதம் 2ம் தேதி வரை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Related Stories:

>