×

குலசேகரன்பட்டினத்தில் திறப்பு விழாவுக்கு முன்பே கடற்கரை பூங்காவில் விளையாட்டு உபகரணம் சேதம்

உடன்குடி,ஏப்.8: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடற்கரைப் பூங்கா திறப்பு விழா நடைபெறுவதற்கு முன்னரே விளையாட்டு உபகரணங்கள் உடைந்து விழுந்துள்ளது. தரமான முறையில் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன்குடி யூனியனுக்குட்பட்ட குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தற்போது மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள உடன்குடி பகுதியில் தான் அனல்மின்நிலையம், துறைமுகம், ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவைகள் அமையப்பெறுகின்றன. அதற்குரிய பணி விறு,விறுப்பாக நடந்து வருகிறது. மேலும் சுற்றுலாத்தலமான மணப்பாடு சிறந்த சூட்டிங் ஸ்பாட்டாகவும் திகழ்கிறது.

 இந்நிலையில் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தமிழக சுற்றுலாத்துறை, பூம்புகார், மாவட்ட ஊராட்சி முகமை ஏற்பாட்டில் ரூ.1கோடி திட்ட மதிப்பீட்டில் சிறுவர்களுக்கான பூங்கா, கார் நிறுத்துமிடம், இ-டாய்லெட் ஆகியவைகள் அமைக்கும் பணி நடந்து முடிந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. மேலும் கடற்கரைப் பகுதியில் ஏராளமான சோலார் மின் விளக்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. தற்போது அமைக்கப்பட்டுள்ள கடற்கரைப் பூங்காவில் செடிகளும் நடப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் யாரும் செல்ல முடியாத வண்ணம் கம்பி வேலிகள்அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவினுள் சிறுவர், சிறுமிகள் விளையாட்டு உபகணரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பே உடைந்து கிடக்கிறது. எனவே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை சிறந்த முறையில் அமைக்கவும், சுற்றுலாப்பயணிகள் மகிழும் வண்ணம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 தற்போது அமைக்கப்பட்டுள்ள கடற்கரைப் பூங்கா பகுதியின் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறநிலையத்துறை சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் எனக் கூறி லட்சகணக்கில் செலவழித்து வந்தனர். ஆனால் தற்போது முறையான பராமரிப்பின்றி பூங்காவில் உள்ள கண்காட்சிப்பொருட்கள், சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சிதிலமடைந்த நிலையிலும் உள்ளது. இதனை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பராமரிப்பதாக கூறி மூடினர். ஆனால் இதுவரை அந்த பூங்காவில் எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. ஏதோ சிலரின் சுய லாபத்திற்காகவும், மக்களின் மீது அக்கறை இல்லாத அதிகாரிகளாலும் தான் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து ஏற்கனவே சிதிலமடைந்து கிடக்கும் பூங்கா அருகே கட்டப்பட்டும் புதிய பூங்கா சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படுமா? உரிய பலனளிக்குமா? சீரிய முறையில் பராமரிக்கப்படுமா? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

Tags : Kulasekaranpattinam ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது