×

தென்காசி கொடிக்குறிச்சி தனியார் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு வாக்குப்பெட்டி அறைகள் பூட்டி சீல் வைப்பு

தென்காசி, ஏப்.8:  தென்காசி மாவட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வாக்குஎண்ணிக்கை மைய அறைகளுக்கு பத்திரமாகக் கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதிகளில் கடந்த 6ம்தேதி வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்திற்கு பத்திரமாக கொண்டு வரப்பட்டன. வழக்கமாக குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்ட நிலையில் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  யுஎஸ்பி கல்வி குழும வளாகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி கட்டிடம் மற்றும் கல்வியியல் கல்லூரி கட்டிடம் ஆகிய வளாகங்களில் வாக்குப்பதிவு
இயந்திரங்கள் வைக்கப்பட்டது. தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கல்வியியல் கல்லூரி வளாகத்திலும் வைக்கப்பட்டது.

நேற்று மதியம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் அனைத்தும் கலெக்டர் சமீரன், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அவர்களது ஏஜென்ட்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அலுவலர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  நிகழ்வுகளின் போது டிஆர்ஓ ஜனனி சவுந்தர்யா, தென்காசி தொகுதி தேர்தல் அலுவலர் ராமச்சந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், திமுக வக்கீல் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, அமமுக வேட்பாளர் முகமது என்ற ராஜா, கடையநல்லூர் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது அபுபக்கர், முதன்மை தேர்தல் முகவர் வக்கீல் செந்தூர்பாண்டியன், அமமுக வேட்பாளர்அய்யாத்துரை பாண்டியன், சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் வக்கீல் ராஜா, ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை, மதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Tenkasi Kodikurichi Private College ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...