வரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பூந்தமல்லி, ஏப்.5: பூந்தமல்லியில் உள்ள பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் மூன்று கருடசேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காஞ்சியில் உள்ள வரதராஜ பெருமாளுக்கு புஷ்பகைங்கர்யமும், ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கர்யமும் செய்து வந்தவர் பூந்தமல்லியை சேர்ந்த திருக்கச்சி நம்பிகள். ராமானுஜருக்கு குருவான பரம பாகவதரான திருக்கச்சி நம்பிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை மூன்று கருடசேவை  நடைபெறும். முதுமை காரணமாக காஞ்சிபுரம் செல்ல இயலாத நிலையில் காஞ்சி வரதர் சூரிய மண்டலத்தில் தோன்றி இவருக்கு காட்சியளித்தார். உடன் ஸ்ரீரங்கத்து திருவரங்கனும், திருமலை திருவேங்கடவனும் காட்சியளித்தனர்.  

இனிமேல் தாங்கள் காஞ்சி வர வேண்டாம் நாங்கள் மூவரும் உங்களுக்காக இங்கேயே சேவை சாதிக்கின்றோம் என்று மூவரும் பூந்தமல்லியில் நிரந்தரமாக கோயில் கொண்டனர். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் வருடத்தில் ஒரு நாள் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை மூன்று கருட சேவை இத்தலத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டும் நேற்று காலை வழக்கம்போல் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் இருந்து கருடசேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது. மேலும் 3 பெருமாளும் கோயிலின் முக்கிய நான்கு வீதி வழியாக ஊர்வலமாக வந்து நிறைவாக கோயில் வளாகத்தை சென்றடைந்து. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மற்ற கோயில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் தான் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூந்தமல்லி குமணன்சாவடி ஞானசுந்தர விநாயகர் கோயில் தர்மகர்த்தா பூவை.ஞானம் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>