தூத்துக்குடி தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

தூத்துக்குடி,ஏப்.5:  ஈஸ்டரை யொட்டி  தூத்துக்குடியில் அனைத்து கிறிஸ்தவ தேவலாயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் பங்குதந்தை  குமார்ராஜா தலைமையில் சிறப்பு பிராத்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி சின்னகோவில் திருஇருதய பேராலயத்தில் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் ஸ்டீபன் தலைமையில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று முத்தையாபுரம் புனித அதிதூதர் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிறப்பு ஈஸ்டர் திருப்பலிகள் நடந்தன. மில்லர்புரம் புனித பவுலின் ஆலயம், டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயம், வடக்கூர் பரி பேட்ரிக் இணை பேராலயம்,  சண்முகபுரம் பரி பேதூரு ஆலயம், ஆசிரியர் காலனி பரி திருத்துவ ஆலயம், திரவியபுரம் சகல பரிசுத்தவான்களின் ஆலயம் உள்ளிட்டு அனைத்து சிஎஸ்ஐ தேவாலயங்களிலும் ஈஸ்டர்  சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தூத்துக்குடி கிறிஸ்தவ விசுவாச ஜெனரல் அசெம்பிளி சபையில் தலைமை போதகர் பால் ஆண்ட்ரூ கனகராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதுபோல மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள், ஆராதனைகள், திருப்பலிகள் நடந்தன. திரளான கிறிஸ்தவ மக்கள் புத்தாடைகள், முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். நாசரேத்: நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தலைமைகுரு ஆண்ட்ரூவிக்டர் ஞானஒளி தலைமையில் உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், சபை ஊழியர்கள் ஜெபஸ்டின், ஜெபராஜ் ஆகியோர் முன்னிலையில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடந்தது. பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத்தில் பங்குதந்தைஅந்தோணி இருதயதோமாஸ் தலைமையிலும், பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரகுரு ஜெபவீரன் தலைமையில் சபை ஊழியர் ஸ்டேன்லி முன்னிலையிலும், மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகரகுரு ஜெபராஜ் தலைமையில் சபை ஊழியர் எல்சின் தங்கதுரைமுன்னிலையிலும், பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகரகுரு ஆல்வின்  தலைமையில் சபை ஊழியர் ஆமோஸ் முன்னிலையிலும் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடந்தது. வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் சேகரத்தலைவர் ஜெபராஜ் தலைமையில் சபை ஊழியர் ஜாண் வில்சன் முன்னிலையில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது.  

 மேலும் மணிநகர், வகுத்தான்குப்பம், திருமறையூர், வாழையடி, அகப்பைகுளம், வெள்ளமடம், தைலாபுரம், ஒய்யான்குடி, பாட்டக்கரை, நெய்விளை, கச்சனாவிளை, நாலுமாவடி, கடையனோடை, குளத்துக்குடியிருப்பு, தங்கையாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். ஆறுமுகநேரி: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.  திருப்பலியை பங்கு தந்தை அலாய்சியஸ் நடத்தினார். இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். ராஜமன்னியபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு திருப்பலியை ஜேசுராஜ் நடத்தினார். புன்னக்காயல் புனித ராஜகன்னிமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை பிராங்கிளின் சிறப்பு திருப்பலி நடத்தினார். சேர்ந்தபூமங்கலம் புனித மிக்கேல்அதிதூதர் ஆலயத்தில் பங்குதந்தை செல்வன் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>