ஸ்டாலின் தமிழக முதல்வராவார் மக்கள் பலத்தை கொண்டு அதிமுகவின் பணபலத்தை முற்றிலும் முறியடிப்போம் களக்காட்டில் காங்.தலைவர் அழகிரி ஆவேசம்

நெல்லை, ஏப்.5: மக்கள் பலத்தை கொண்டு அதிமுகவின் பண பலத்தை முற்றிலும் முறியடிப்போம் என்றும், ஸ்டாலின் தமிழக முதல்வராவார் என்றும் தமிழக காங் தலைவர் அழகிரி களக்காட்டில் தெரிவித்தார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ரூபிமனோகரன் தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக சென்று சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை, சால்வைகள் அணிவித்தும் உற்சாகமான வரவேற்பளித்து வந்தனர். அவர் நேற்று மாலை ஏர்வாடியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திருக்குறுங்குடி, டோனாவூர், மாவடி, சிதம்பரபுரம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட ரூபி மனோகரன் களக்காட்டில் இறுதிகட்ட பிரசாரத்தை முடிவு செய்தார்.

அவரது பிரசாரத்தை முடித்து வைத்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசியதாவது: நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரன் ஒரு ராணுவ வீரர். உழைப்பால் உயர்ந்தவர். அவர் நாட்டை காக்க தன்னை அர்ப்பணித்தது போல, நாங்குநேரி தொகுதி மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணிப்பார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று பொதுமக்கள் கருதுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகத்தை முன்னேற்ற எந்தவொரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை. ஏல முறையில் முதலமைச்சர் பதவியை பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் 1970ல் கிளை செயலாளராக

பதவியேற்று படிப்படியாக இன்று திமுக தலைவராகியுள்ளார். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது பெட்ரோல் லிட்டர் ரூ.70க்கும், காஸ் சிலிண்டர் ரூ.400க்கும் வழங்கப்பட்டது. அப்போது கச்சா எண்ணைய் விலை 108 டாலராக இருந்தது. தற்போது கச்சா எண்ணைய் விலை 54 டாலராக குறைந்துவிட்டது. கச்சா எண்ணைய் விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.35க்கும், காஸ் சிலிண்டர் விலை ரூ.200க்கும் என சரி பாதியாக அல்லவா விற்க வேண்டும். ஏன் இவ்வளவு உயர்ந்தது. இவர்களின் பொருளாதார கொள்கை தவறு. திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் நாங்கள் பெட்ரோல், காஸ் சிலிண்டர் விலைகளை குறைத்து காட்டுவோம்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று அதிமுகவினர் கருதுகின்றனர். மக்கள் பலத்தை கொண்டு பண பலத்தை முற்றிலும் முறியடிப்போம். ஸ்டாலின் தமிழக முதல்வராவார். எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு வாசிங் மிசின் தருகிறேன் என்கிறார். தமிழ்நாட்டில் 8 லட்சம் கோடி கடன் இருக்கும் போது எப்படி வாசிங்மிசின் தர முடியும். பொய்யான வாக்குறுதிகளை அளித்து மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று எண்ணுகிறார்கள். காமராஜர் முதல்வராக பதவியேற்ற போது தமிழகத்தில் எல்லா கிராமங்களிலும் ஆரம்ப பள்ளிக்கூடம் அமைப்போம் என வாக்குறுதி அளித்தார். அதுபோல 5 ஆண்டுகளில் 12,500 கல்விக்கூடங்களை திறந்து கின்னஸ் சாதனை படைத்தவர். அவரது வழியில் வந்த ரூபி மனோகரன் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். ஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசின் சாதனை ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>