×

பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் திருவிழா

விருதுநகர்,ஏப்.5: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை கோயில் முன் பொங்கலிட்டு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தென்மாவட்டங்களில் பிரபலமான பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா, கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு திருவிழா மார்ச் 14ல் சாட்டுதல் அறிவித்தனர். மார்ச் 28ல் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் மஞ்சள் காப்பு கட்டிவிரதம் துவக்கினர். அம்மனை குளிர்விக்கும் வகையில் தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் கோயில் கொடி மரத்திற்கு நள்ளிரவு முதல் காலை வரை தண்ணீர் ஊற்றி வந்தனர்.நேற்று அதிகாலை முதல் கோயில் முன்பாக நேர்த்திக்கடன் செலுத்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். நேற்று இரவு துவங்கி, தீச்சட்டி எடுத்தல், கயிறு குத்துதல், மொட்டை போடுதல், மாவிளக்கு எடுத்தல், உருண்டு கொடுத்தல், ஆயிரங்கண் பானை, ஆக்கி வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். அக்னிச்சட்டி, ரதம் இழுத்தல், 51, 101 சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்த இன்று இரவு 10 மணி வரை கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நாளை மாலை 5.06 மணிக்கு வெயிலுகந்தம்மன், மாரியம்மன் சித்திரதேரில் அமர்ந்து ரதவீதிகளில் செல்லும் தேரோட்டம் நடக்க உள்ளது.

Tags : Panguni Pongal Festival ,Parasakthi Mariamman Temple ,
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...