சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு மாத தீவிர பிரசாரம் ஓய்ந்தது நாளை காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு

சிவகங்கை, ஏப்.5: சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த அனைத்து கட்சிகளின் பிரச்சாரம் நேற்று இரவுடன் ஓய்ந்தது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்.26ல் வெளியானது. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, அமமுக, மநீம, நாதக மற்றும் சுயேட்சைகள் உள்பட 15 பேர் களத்தில் உள்ளனர். காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் பாஜ, அமமுக, மநீம, நாதக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 26 பேர் போட்டியிடுகின்றனர். மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 13 பேர் களத்தில் உள்ளனர்.

தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடங்கிய பிரச்சாரம் கடந்த சில வாரங்களாக தீவிரமாக தொடர்ந்து நடந்தது. தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தரக்கோரி கட்சிகளின் மாநில தலைவர்கள், அகில இந்திய தலைவர்கள், கட்சிகளின் நிர்வாகிகள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலை பொருட்படுத்தாமல் கட்சி வேட்பாளர்கள் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தனர். வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி உள்ளூர் நிர்வாகிகளும் பகுதி, பகுதியாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7 மணியுடன் பிரச்சாரத்திற்கான நேரம் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டனர்.

சிவகங்கை தொகுதி திமுக கூட்டணி இந்திய ம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரனுக்கு ஆதரவாக சிவகங்கை நகரில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டு பிரச்சாரம் நிறைவு செய்யப்பட்டது. திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ திருப்பத்தூர் நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அவரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பேசினார். காரைக்குடி தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, காரைக்குடி முத்துமாரியம்மன்கோவில் முன்பு பிரச்சாரத்தை நிறைவு செய்தார். மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி இளையான்குடியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இன்று ஓய்வு நாள். நாளை காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.

Related Stories:

>