தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தொகுதி முழுவதும் இறுதிகட்ட பிரசாரம்

தொண்டாமுத்தூர்,ஏப்.5: தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி நேற்று உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு தனது இறுதி கட்ட பிரசாரத்தை காலையில் கோவைப்புதூர் மைதானத்தில் துவக்கினார். தொடர்ந்து குனியமுத்தூர்,கரும்புக்கடை,ஆர்.எஸ்.புரம்,பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, காந்தி பார்க்,வேடப்பட்டி பஸ் ஸ்டாப், களிக்க நாயக்கன்பாளையம், குளத்துப்பாளையம், தொண்டாமுத்தூர்,தேவராயபுரம், வெள்ளிமலை பட்டிணம், நரசிபுரம், போளுவாம்பட்டி,செம்மேடு, இருட்டுப்பள்ளம், மத்துவாரயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி,தென்கரை,பேரூர் என சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு நேற்று இரவு 7 மணி அளவில் செல்வபுரம் ஜங்ஷனில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் பொதுமக்களின் மத்தியில் பேசியதாவது:மூன்றரை லட்சம் கோடி தமிழகத்தின் வரிப்பணம் அதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு கொடுத்து விடுகிறோம். அது எங்கே செல்கிறது. உத்திரபிரதேஷ்,பீகார் இது போன்ற மாநிலங்களுக்கு நமது வரிப்பணம் செலவிடப்படுகிறது. நமது பசங்க,பிள்ளைங்களுக்கு வேலை இல்லை. முதியவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. இந்த கொடுமைகளையெல்லாம் எடப்பாடியார் தட்டி கேட்க வேண்டாமா, அடிமை ஆட்சி தான் நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக அமைச்சர்கள் பலூன் குத்தி விளையாடுவதிலும், ஆற்றில் தெர்மாக்கோல் விடுவதிலும் காலத்தை கழித்துள்ளனர். ஊழலில் திளைத்த அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்.

மே 2ம் தேதி மதியம் 12 மணிக்கு மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆகிறார் என்ற செய்தியை நாம் எல்லோரும் கேட்க இருக்கிறோம். தொண்டாமுத்தூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யும் படி கேட்டு கொள்கிறேன். அதற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வரானதும் மு.க.ஸ்டாலின் 100 நாட்களுக்குள் நிறைவேற்றி கொடுப்பார் என உறுதி அளித்தார்.முன்னதாக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி நேற்று பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்து அவருக்கு பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றார்.  தேர்தல் பிரசாரத்தின் போது மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமசந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, பேரூர் நகர செயலாளர் அண்ணாதுரை மற்றும் திமுக,காங்கிரஸ்,மதிமுக,கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.புட்நோட்கோவை செல்வபுரத்தில் தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி நேற்று மாலை நடைபயணமாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Related Stories: