×

ஒருவருடத்திற்குள் நாகர்கோவிலை கிரீன் சிட்டியாக மாற்றுவேன் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் உறுதி

நாகர்கோவில், ஏப்.5: தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய உள்ளது, மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றிபெறுவார்கள் என்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் தொகுதி முழுவதும் தனியாகவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உடன் இணைந்தும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக தொகுதிக்கு செய்த திட்ட பணிகளையும், திருக்கோயில்களுக்கு செய்த பணிகளையும் பட்டியலிட்டு அவர் வாக்குகள் சேகரித்தார். மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளையும், தொகுதி மக்களுக்கு தான் செய்ய இருக்கின்ற திட்டங்களையும் தெரிவித்து வாக்கு சேகரித்தார்.

 இதன் தொடர்ச்சியாக நிறைவு நாளான நேற்று மாலை நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். வெட்டூர்ணிமடம், கிருஷ்ணன்கோயில், வடசேரி, ஒழுகினசேரி வழியாக வந்து நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என்பதை மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்று மக்களிடையே மதவெறியை தூண்டிவிட்டு மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசோ ஊழலில் திளைத்துள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு முழுமையாக ஆதரவு அளித்து மண்டியிட்டு கிடக்கிறது. இதனால் தமிழகத்தின் மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோகிறது. இந்த தேர்தல் தமிழக உரிமைகளை மீட்க வேண்டிய தேர்தல். அதற்கு மதசார்பற்ற கூட்டணியால் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையப்போவதும் உறுதி.

எனவே மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த குமரி மாவட்ட மக்கள் அனைவரும் மதசார்பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.நாகர்கோவில் தொகுதியை 2 வருடத்தில் அனைவரும் பாராட்டும் விதத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி  மேம்படுத்தப்படும். ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டம் பணி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் நாகர்கோவில் மாநகராட்சியை கிரீன் சிட்டியாக மாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரசாரத்தை முடித்து கொண்ட அவர் கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் மணிமேடையில் இருந்து ஊர்வலமாக சென்று வேப்பமூடு ஜங்ஷனில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பிரசாரத்தின்போது மாநகர செயலாளர் மகேஷ், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அகமதுஉசேன், அந்தோணி, திமுக நிர்வாகிகள் தில்லை செல்வம், உதயகுமார், ஷேக் தாவூத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Suresh Rajan ,Nagercoil ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி