×

தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் போலீசார்

தஞ்சை, ஏப். 5: தஞ்சை மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) நடைபெற உள்ள தேர்தலுக்காக 5,000 போலீசார், ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுளளனர்.தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 89 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எட்டு தொகுதிகளும் 2886 வாக்குச்சாவடிகள் வாக்காளர்கள் வாக்களிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இங்கு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவை முழுமையாக பதிவு செய்யவும், வாக்குச்சாவடியில் கூடுதல் பாதுகாப்பு பணியில் காவலர்களை ஈடுபடுத்தவும் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கும் சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 11 கம்பெனி துணை ராணுவத்தினர் என ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பதற்காக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 204 மண்டல குழுக்களுக்கு தலா ஒரு வாகனம் வீதம் தயார் நிலையில் உள்ளது.மேலும் கூடுதலாக 32 வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு அவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டு தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும்வரை கண்காணிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில், வாக்காளர்கள் தேர்தல் நடைபெறும் நாளன்று அச்சமின்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முகக்கவசங்கள், தெர்மல் ஸ்கேனர், ஒருமுறை உபயோகப்படுத்தும் கையுறை, பிபிகிட், சர்ஜிக்கல் மாஸ்க், சானிடைசைர், பெரிய பக்கெட் என 15 வகையான பொருட்களை மொத்தமாக வாங்கி மாவட்ட அளவில் இருப்பு வைக்கப்பட்டது.இதையடுத்து இந்த பொருட்கள் அனைத்தும் ஒரு அட்டை பெட்டியில் வைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் தஞ்சாவூர் அண்ணா கலையரங்கத்திலிருந்து வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Tanjore district ,
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...