வேலூர் மாவட்டத்தில் விடிய விடிய போலீஸ் ரெய்டில் 2,300 மதுபாட்டில்கள் பறிமுதல்

* 38 பேர் அதிரடி கைது

* மலைகளில் சாராய ஊறல் அழிப்பு

வேலூர், ஏப்.5:வேலூர் மாவட்டத்தில் விடிய விடிய நடத்திய ரெய்டில் 2,300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் ெசய்தனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி, நேற்று முதல் நாளை வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அளவுக்கு அதிகமாக மது பாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி தேர்தல் தினத்தன்று விற்பனை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.இந்நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் ரெய்டு நடத்த எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய அந்தந்த சப்-டிவிஷன் டிஎஸ்பிக்கள் தலைமையில் அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர்.

அப்போது, வேலூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த 910 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் காட்பாடி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் குடியாத்தம் சப்-டிவிஷனுக்கு உட்பட பகுதிகளில் 398 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 18 பேரை கைது செய்தனர். ஒரே இரவில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் மொத்தம் 2,308 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு, 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 300 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதுதவிர மாவட்டம் முழுவதும் கலால் போலீசார் மலைப்பகுதிகளில் அதிரடியாக ரெய்டு நடத்தி கள்ளச்சாராய ஊறலை அழித்து வருகின்றனர்.

Related Stories:

>