×

பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாடு இல்லாமல் தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் மனோதங்கராஜ் எம்எல்ஏ பிரசாரம்

குலசேகரம்,ஏப்.4: பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மனோதங்கராஜ்  குலசேகரம், பொன்மனை, பேச்சிப்பாறை, கோதையார் போன்ற இடங்களில் வாக்குகளை சேகரித்தார். கோதையார் பகுதியில் பால்வெட்டும் தொழிலாளர்கள்,  மின்வாரிய தொழிலாளர்களிடம் ஆதரவு திரட்டினார். தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பத்மநாபபுரம் தொகுதியில் திமுக எம்எல்ஏவாக எதிர் கட்சி வரிசையில் இருந்து  போராட்டம் மூலம் ஏராளமான பணிகள் செய்துள்ளேன். எனது போராட்டங்கள் காரணமாக  சுமார் ₹120 கோடி அளவுக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. நான் தொகுதியில் இதுவரை எவ்வித பாகுபாடும் இல்லாமல் பணி  செய்துள்ளேன். தொடர்ந்து விருப்பு வெறுப்பு, பெரும்பான்மை சிறுபான்மை  இவற்றுக்கு அப்பாற்பட்டு தொகுதியின் வளர்ச்சி என்ற ஒற்றை சிந்தனையில் எனது  பணிகள் தொடரும்.  

தேர்தல் முடிவடைந்ததும் திமுக  அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும். கலைஞரின்  திட்டத்தால்  12 ம் வகுப்பு  வரை இலவச கல்வி பயின்று தேர்வடைந்ததும் கவுன்சிலிங் முறையில் மருத்துவம்  மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை எளிதாக பெற்று வந்தனர். இதனை பொறுத்து  கொள்ளாத மத்திய பாஜ அரசு , அடிமை அதிமுக அரசை  பயன்படுத்தி நீட் தேர்வை புகுத்தி தமிழக மாணவர்களின் உயர் கல்வி உரிமையை  பறித்து கொண்டது. இன்று தமிழக உயர்கல்வி நிலையங்களில் பிற மாநிலத்தவர் ஆதிக்கம் உள்ளது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நீட் தேர்வை  தமிழகத்தில் ரத்து செய்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒளி ஏற்ற  வேண்டும். இதேபோன்று  அரசுதுறை முதல் தனியார் துறை வரை அனைத்திலும் தகுதியற்ற  வட இந்தியர்கள் புகுத்தப்பட்டுள்ளனர். இதனை மாற்றி தமிழக வேலை தமிழருக்கே  என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் படித்துவிட்டு  வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்கள் நலனுக்காக தொழில்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரப்பர் சார்ந்த தொழில்களை உருவாக்குவதோடு ரப்பர் ஆராய்ச்சி மையம்,  பேச்சிப்பாறையிலுள்ள தோட்டகலை ஆராய்ச்சி மையத்தை தோட்டகலை கல்லூரியாக  மாற்றுவது, குமரி மாவட்டத்தில் சுற்றுலாவை வளர்ச்சியடைய செய்வது போன்ற ஏராளமான திட்டங்கள்  குமரி மாவட்டத்துக்கென திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தளபதி தலைமையில் நல்லாட்சி அமைய  உதயசூரியன்  சின்னத்திலும், நாடாளுமன்ற இடை தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்த்  அவர்களுக்கு கை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். பிரச்சார பயணங்களில்  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள்  ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Manothankaraj ,MLA ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா