×

காங்.பைக் பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு வேட்பாளர்கள் தனித்தனி வாகனத்தில் சென்றனர்


குளச்சல்,ஏப்.4: கன்னியாகுமரி  நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்  மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்.வேட்பாளர்களுக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு  காங்., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் முட்டம் முதல் குறும்பனை வரை  கடலோர கிராமங்களில் பைக் பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.முட்டம்  கிராமத்தில் தொடங்கிய இந்த பைக் பேரணியை வேட்பாளர்கள் விஜய்  வசந்த்,பிரின்ஸ் ஆகியோர் பேசி துவக்கி வைத்தனர். தொடர்ந்து வேட்பாளர்கள்  ஒரே வாகனத்தில் பிரசாரம் செய்து  வர தொண்டர்கள் பைக்குகளில்  பேரணியாக  சென்றனர்.  பேரணி கடியபட்டணம், மணவாளக்குறிச்சி  சின்னவிளை,பெரியவிளை,மண்டைக்காடு புதூர்,கொட்டில்பாடு வழியாக குளச்சல்  துறைமுகப்பகுதி நோக்கி சென்றது. குளச்சல் பள்ளி முக்கு சந்திப்பில்  பேரணி சென்றதும் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த குளச்சல்  ஏ.எஸ்.பி.விஸ்வேஸ் பி.சாஸ்திரி பேரணியை தடுத்து நிறுத்தி ‘பைக் பேரணி செல்ல  அனுமதி இல்லை .தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பேரணியாக செல்லுங்கள்’ என  கூறினார்.

மேலும் இரண்டு வேட்பாளர்களும் ஒரே வாகனத்தில்  செல்லக்கூடாது.தனித்தனி வாகனத்தில்தான் செல்ல வேண்டும்.பைக் பேரணி  வந்தவர்களை கலைந்து போக சொல்லுங்கள் என கூறினார். இதனால் அங்கு  தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் பைக்  பேரணி வந்தவர்கள் கலைந்து சென்றனர். வேட்பாளர்கள் இருவரும் தங்கள்  வாகனங்களில்  சென்றனர். பின்னர் வேட்பாளர்கள் குளச்சல்  காமராஜர் சிலைக்கு  மரியாதை செலுத்திவிட்டு தங்கள்  பிரசாரத்தை தொடர்ந்தனர். இதில் மாநில காங்.பொதுச்செயலாளர் டாக்டர் பினுலால்  சிங், செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர்கள் கே.டி.உதயம்  முனாப், நகர தலைவர் சந்திரசேகர், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய  தி.மு.க.செயலாளர் எப்.எம்.ராஜரத்னம், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர்  ஜோசப், நகர தி.மு.க.பொறுப்பாளர் ரகீம், தொழிலதிபர்கள்  எஸ்.கே.ஆன்றனிராஜ், ஆன்சல் உள்பட கூட்டணிக்கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...