திருச்சுழி தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் தேர்தல் விதிமீறி இரவு பிரசாரம் தேர்தல் ஆணையம் உடந்தையென குற்றச்சாட்டு

காரியாபட்டி, ஏப். 4: திருச்சுழி அருகே காரியாபட்டி பேரூர் பகுதியில் திருச்சுழி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரானஅகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் எஸ்.ராஜசேகர் பள்ளத்துப்பட்டி, ஜெகஜீவன்ராம் தெரு, காமராஜர் காலனி, அச்சம்பட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பகுதியில் நேற்றுமுன் தினம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் ஆணையம் விதித்துள்ள நேரக்கட்டுப்பாட்டை மீறி 10 மணிக்கு மேல் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததால் காவல்துறை எச்சரித்தும் தொடர்ந்து வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இரவு 11.30 மணி வரை பிரசாரம் நடைபெற்றது. தேர்தல் பறக்கும் படையோ, தேர்தல் ஆணையத்தின் அதிகரிகளோ யாரும் அந்த பக்கமே வரவில்லை. வேட்பாளருக்கு கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தும் ஒலிபெருக்கி மூலம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளரை ஜெகஜீவன்ராம் பகுதி மக்கள் மறித்து பிரச்னையில் ஈடுபட்டனர். எங்கள் பகுதியில் குடிநீர் வசதி இல்லை. உடைந்த குழாயில் தான் தினந்தோறும் தண்ணீர் பிடித்து வருகிறோம். இதுவரை யாரும் சரிசெய்து தரவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வெற்றி பெற்று வந்த உடன் அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்து அப்பகுதியில் இருந்து உடனே கிளம்பினார். தேர்தல் விதிமுறை மீறி பிரசாரம் மேற்கொள்ளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>