×

கோயில் திருவிழா கோஷ்டி மோதல் மாணவர்கள் கைதை தவிர்க்க வலியுறுத்தி டிஎஸ்பி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை போடியில் பரபரப்பு

போடி, ஏப். 4: போடி குப்பிநாயக்கன்பட்டியில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் உள்ளது. கோயில் நிர்வாகிகள் மூக்கையா, முருகன் தலைமையில் கடந்த வாரம் பங்குனி உற்சவ திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், கோயில் திருவிழா வரவு, செலவு தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முருகன், மூக்கையா உள்ளிட்ட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ராஜேஷ் (38), ராஜேந்தின் (44), தீபன் (25) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதையடுத்து பாக்கியுள்ள 14 பேர்களை கைது செய்ய குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் நகர்  இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் வீடுகளுக்கு சென்றனர்.

அப்போது வீடுகளில் இருந்த தாய்மார்கள், ‘எல்லோரும் படிப்பவர்கள், அவர்களை கைது செய்தால் வாழ்க்கை பாழாகி விடும் என்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்வோம் அல்லது உங்கள் மீது வழக்குப்பதியப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து பெண்கள் மற்றும் உறவினர்கள் போடி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த டிஎஸ்பி பார்த்திபனிடம், ‘பள்ளி, கல்லூரி மாணவர்களை கைது செய்தால், அவர்களது வாழ்க்கை பாழாகும் என்றனர். மேலும், கோயில் வரவு செலவு கணக்கை சரிபார்த்து பிரச்னை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து டிஎஸ்பி பார்த்திபன், ‘பள்ளி, கல்லூரி மாணவர்களை கைது செய்ய மாட்டோம். தேர்தல் முடிந்தவுடன் பிரச்னையை பேசித் தீருங்கள். அதுவரை சண்டை போடாமல் பொறுமையாக இருங்கள் என அறிவுறுத்தினார். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : Temple festival ,
× RELATED திருமயம் அருகே மேரிநகர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா