தளபதி தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை, ஏப்.4: மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதி, தொகுதிக்குள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்றிரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், நேற்று தொகுதிக்குள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, வாக்காளர்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடங்களில் எல்லாம் தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். மதுரையில் அண்ணாநகர், தாசில்தார்நகர் பகுதிகளில் பிரசாரம் செய்த அவர், ஒவ்வொரு வீடாக சென்றார். மேலும் இங்குள்ள ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதுடன், இப்பகுதி இஸ்லாமியர்களின் வீடுகளுக்கும் சென்று வாக்குகள் சேகரித்தார். மேலும் பிள்ளைமார் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தலைவர்களையும் நேற்று சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

முக்கிய பிரமுகர்ளை சந்தித்த அவரிடம் திமுகவிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி, வாக்களித்து வெற்றி பெறச்செய்வதாக அப்போது அவர்கள் உறுதியளித்தனர். மேலும் தொகுதிக்குள் சாலை வசதிகள், பாதாளச்சாக்கடை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என உறுதியளித்தார். பிரசாரத்தின் போது மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் பொன் சேதுராமலிங்கம், பகுதி செயலாளர்கள் அக்ரிகணேசன், ராதாகிருஷ்ணன், மதிமுக நிர்வாகி வக்கீல் ஆசைத்தம்பி மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>