×

பொட்டகுளம் பகுதிக்கு அடிப்படை வசதிகள் திமுக வேட்பாளர் சின்னம்மாள் உறுதி

மதுரை, ஏப்.4: பொன்மேனி பொட்டகுளம் பகுதியில் அடிப்படை வசதிகளை கொண்டு வருவேன், நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டுமனை பெற்றுத்தர பாடுபடுவேன் என்று திமுக வேட்பாளர் சின்னம்மாள் வாக்குறுதி வழங்கி பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சின்னம்மாள் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தெருத்தெருவாக வலம் வந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு சின்னம்மாளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொட்ட குளம் பகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது, ‘‘இங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பெற்றுத் தருவேன்.

நீண்டகாலமாக பட்டா இல்லாமல் தொடர் கோரிக்கை வைத்து வருபவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கான பட்டா பெற்றுத்தர முழு முயற்சி மேற்கொள்வேன். புதிய பாதாள சாக்கடை திட்டத்தை தொகுதிக்குள் முழுமையாக கொண்டுவர பாடுபடுவேன். குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்ப்பேன்’’ என்று பிரசாரம் செய்து வாக்குகள் கேட்டார். வேட்பாளர் சின்னம்மாள் சென்ற இடங்களிலெல்லாம் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும், துண்டு அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின் போது மேற்கு தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : DMK ,Chinnammal ,Pottakulam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்