×

மயிலாடும்பாறை அருகே கிணற்றில் நீர் இரைத்து குடிக்கும் கிராம மக்கள் மாசடைந்து இருப்பதால் சுகாதாரக்கேடு

வருசநாடு, ஏப். 3: மயிலாடும்பாறை அருகே, சுகாதாரமற்ற கிணற்றில் இருந்து நீரை இரைத்து குடிப்பதால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மயிலாடும்பாறை அருகே, மந்திசுனை மூலக்கடை ஊராட்சியில் சிறப்பாறை கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மயிலாடும்பாறை மூலவைகை ஆற்றில் உறைகிணறு அமைத்து, கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக சிறப்பாறை கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், சிறப்பாறை கிராமம், மூல வைகை ஆற்றில் இருந்து உயரமாக அமைந்துள்ளதால் மேல்நிலை, குடிநீர் தொட்டியில் நீர் நிரப்ப முடியவில்லை. அவ்வாறு நீர்நிரப்பினாலும் அது மக்களுக்குப் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் கூட்டுக் குடிநீர் குழாயில் வரும் நீரை மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு பதிலாக கிராம பொது கிணற்றில் தேக்கி வைத்து, அதிலிருந்து கயிறு மூலம் இறைத்து அதனை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘மேல்நிலை குடிநீர் தொட்டியில் நீர் நிரப்ப முடியாத காரணத்தால், கிணற்றில் தண்ணீரை தேக்கி வைத்து குடித்து வருகிறோம். வயதான முதியவர்கள் கிணற்றிலிருந்து நீர் இரைக்க மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், கிணறு திறந்தவெளியில் இருப்பதால், நீர் மாசடைந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குழாய் அமைத்து குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், சிறப்பாறை கிராம பொதுமக்கள் பழைய கற்காலம் போல குடிநீரை கிணற்றிலிருந்து இறைத்து குடிக்கும் நிலையில் உள்ளோம். எனவே, சிறப்பாறை கிராமத்திற்கு குடிநீர் முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...