காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம், பாதுகாப்பு அறை அமைக்கும் பணி தீவிரம் கலெக்டர், எஸ்பி ஆய்வு

காரைக்குடி, ஏப் 3:  காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எஸ்.பி ராஜராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வில், அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப கட்டிடத்தில் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம். மெயின் கட்டிடத்தில் திருப்புத்தூர், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம். முருகப்பா அரங்கில் மானாமதுரை (தனி) தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களை பார்வையிட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வரவேற்பாளர் அறை, வாக்கு எண்ணும் இடம், வாக்குப்பதிவு முடிவுற்ற பின் பாதுகாப்பாக கொண்டு வந்து வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் வாக்கு எண்ணிக்கை அன்று வேட்பாளர்கள், முகவர்கள் பணி மேற்கொள்வதற்கான இடவசதி குறித்து ஆய்வு செய்தனர். நிறைவாக வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் உடனடியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வந்து வைக்க வேண்டியது உள்ளதால் 2 தினங்களுக்குள் அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார். உடன் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுரேந்திரன், சிந்து, முத்துக்கழுவன், தனலட்சுமி, பிஆர்ஓ பாண்டி உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

>