×

பிரதமர், முதல்வர் வருகையால் மதுரையில் கடும் போக்குவரத்து நெரிசல்

மதுரை, ஏப்.3: பிரதமர் மோடி மற்றும் முதல்வர் வருகையால் மதுரை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. பாஜ மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் மோடி மதுரை வந்தார். விமான நிலையத்திலிருந்து கார் மூலம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இரவு 8.35 மணியளவில் வந்தார். அப்போது தெற்குவாசல் மற்றும் கோயிலை சுற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் கோயிலைச் சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, மோடி கோயிலை விட்டு சென்ற பின்னரே ஊழியர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்குள் தீ விபத்தில் பாதித்த பகுதிகள் பிரதமர் பார்வையில் பட்டுவிடாமல், ஒரு வழியில் அழைத்துச் சென்று அழைத்து வந்தனர். பசுமலை தனியார் ஓட்டலில் தங்கிய அவர், ஓட்டலுக்கு செல்லும் வரை பெரியார் மற்றும் ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் வந்து செல்லும் பஸ்கள், கார்கள் மற்றும் டூவீலர்கள் கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதேபோல் நேற்று காலையில் ரிங்ரோட்டில் நடந்த பொது கூட்டத்திற்கு அவர் வரும் முன்னரே ஒரு மணி நேரத்திற்கு மேலாக பழங்காநத்தம், தெற்குவாசல், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் தனியார் நிறுவனம் மற்றும் கடைகளுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் வந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகினர். மேலும் நகரில் கோரிப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெல்ல நகர்ந்தன. இதனால் பொதுமக்கள் நேற்று பெரும் அவதிக்கு ஆளாகினர். சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் வருகையால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாமல் தவித்தது. போக்குவரத்து போலீசார் திட்டமிட்டு போக்குவரத்தை வழி நடத்தி இருந்தால் நகருக்குள் இந்த நெருக்கடியை தவிர்த்திருக்கலாம். போலீசார் போக்குவரத்து மாற்றம் என திட்டமிடாத அறிவிப்பை நடைமுறைப்படுத்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டனர்’’ என்றனர்.

Tags : Madurai ,Chief Minister ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...