×

ரோப்கார் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் பழநியில் பக்தர்கள் கோரிக்கை

பழநி, ஏப்.3: பழநியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச்சும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப் காரும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வின்ச்சில் பயணிக்க சாதாரண கட்டணமாக ரூ.10ம், சிறப்பு வழி கட்டணமாக மலைக்கு செல்வதற்கு ரூ.50 மற்றும் கீழே இறங்குவதற்கு ரூ.25 ஆகியவை வசூலிக்கப்படுகிறது. இதுபோல் ரோப் காரில் பயணிக்க சாதாரண கட்டணமாக ரூ.15ம், சிறப்பு வழி கட்டணமாக ரூ.50ம் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது ரோப் கார் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டது. ரூ.15 கட்டணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது பழநி கோயிலில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் தற்போது வரை ரோப் காரில் பயணிக்க ரூ.15க்கான டிக்கெட் வழங்கப்படுவதில்லை. ரூ.50 டிக்கெட் வாங்கினால் மட்டுமே ரோப் காரில் பயணிக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. பழநி கோயிலுக்கு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகளவு வருகின்றனர்.
4 பேர் கொண்ட ஒரு குடும்பம் ரோப் காரில் மலைக்கோயில் சென்றுவர ரூ.400 செலவாகிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பக்தர்களின் வருகை குறைவினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட இதுபோன்ற கட்டண வசூலில் கோயில் நிர்வாகம் ஈடுபடுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பழநி கோயில் அறங்காவலர் குழு மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ரோப்காரில் வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani ,
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்