திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு வசதிகள் எப்படி?

திருச்சி, ஏப்.3: திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜமால்முகமது கல்லூரியில் வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக்கப்படும் அறை போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் திவ்யதர்ஷினி பொதுப்பணித்துறை கட்டடப் பொறியாளர்களுடன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் லால்குடி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குஎண்ணிக்கை நடைபெறும் ராமகிருஷ்ணா பொறியயில் கல்லூரியில் பாதுகாப்பு அறை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு எழுதுப்பொருட்கள் உள்ளிட்ட பென்சில், பேப்பர், பேனா, ரப்பர், மை, நூல், அரக்கு பல்வேறு வகையான பொருட்கள் அனுப்புவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்தார். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி, கையுறை போன்ற பல்வேறு வகையான பொருட்கள் தயார் நிலையில் இருப்பதையும் கலெக்டர் ஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோலம் மற்றும் ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories:

>