கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் கடல்வளத்தை மேம்படுத்த புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும் பிரதமர் மோடி உறுதி

நாகர்கோவில், ஏப்.3: நாட்டில் கடல்வளத்தை மேம்படுத்த புதிய மீன்பிடி  துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று அகஸ்தீஸ்வரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.  கன்னியாகுமரி  அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக  கூட்டணியின்  தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி  பேசியதாவது: மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அரசாக, வலுவான சாதனைகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளோம். தீர்க்கப்படாத   சிக்கல்கள்  தீர்க்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம்  தனுஷ்கோடி ரயில் நிலையம் 1964 ஆண்டு சேதமடைந்தது. அதை சரி செய்ய நமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  அதுபோல சேதமான பாம்பன் பாலத்தையும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மும்பை  - கன்னியாகுமரி இடையே புதிய பொருளாதார வழித்தடத்தை தொடங்கியிருக்கிறோம்.   தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு  செய்துள்ளோம். நமது கவனம் நாட்டின் வளர்ச்சி மீது இருக்கிறது. டெல்லியின்  மத்திய பகுதியில் ஒரு வம்சத்திற்கு நினைவுச் சின்னமாக அமைக்க பல ஏக்கர்  இடத்தை எடுத்தனர். ஆனால் நாங்கள் அப்துல்கலாம் நினைவிடத்தை ராமேஸ்வரத்தில்  அமைத்தோம்.

நம்  நாட்டில் 356 வது சட்டப் பிரிவை காங்கிரஸ் பலமுறை பயன்படுத்தியுள்ளது.  தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகள் பலமுறை காங்கிரஸால் கலைக்கப்பட்டுள்ளன. அனைவரும்  இணைந்து, அனைவரின் நம்பிக்கையையும் பெற்று, அனைவரும் உயருவோம் என்பதுதான்  எங்கள் சித்தாந்தம். எல்லா மக்களுக்கும் உதவும் எண்ணம் அரசுக்கு உள்ளது. என்ன  ஜாதி, இனம் என பார்க்காமல் அரசு உதவி செய்கிறது. ஈரானில் பாதுகாப்பு  இல்லாமல் இருந்த நர்சுகளை மீட்டோம். பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார்  ஆப்கானிஸ்தானில் 18 மாதங்களாக பயங்கரவாதிகளால் பிடித்து  வைக்கப்பட்டிருந்தார். அவர் உயிருடன் வருவார் என அவரது குடும்பத்தினருக்கு  நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் பாதுகாப்பாக வீடு வந்தார்.

மோதலில் நம்பிக்கை கொண்டவர்கள் மோதலை தொடர்ந்துகொண்டே இருக்கட்டும். அன்பில் நம்பிக்கைகொண்ட நாம் அன்பு செலுத்துவோம். கடந்த  ஆண்டு கொரோனா தொற்று நோய் வந்தது. பல இந்தியர்கள் வெளிநாடுகளில்  சிக்கினர். வந்தே பாரத் திட்டம் மூலம் அவர்களை பாதுகாப்பாக அழைத்து  வந்தோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 லட்சம் மக்களை அழைத்து வந்தோம். அவர்கள்  என்ன ஜாதி, என்ன மதம் என பார்க்காமல் இந்தியர்களாகவே பார்த்தோம்.

இங்கு மூன்று முக்கிய அம்சங்கள் பற்றி பேச நினைக்கிறேன். செழிப்பான பண்ணைகள்,  வளமான தொழிற்சாலைகள், கடற்கரை மேம்பாடு ஆகியவைதான் நம் திட்டம். நம்  ஆட்சியில் கொப்பரை தேங்காய்க்கான விலை கடந்த ஆட்சியைவிட அதிகம்  வழங்குகிறோம். விவசாயிகளின் வருமானத்தை கூடியவிரைவில் இரட்டிப்பாக்க  தீவிரமாக வேலை செய்து வருகிறோம். வணிக சமூகங்களுக்கு, குறிப்பாக சிறு, குறு  நிறுவனங்களுக்கு சிறப்பான உதவிகள் செய்து வருகிறோம். பாரம்பரிய தொழில்களை  ஊக்கப்படுத்துகிறோம். உள்ளூரில் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள், பனை  ஓலையில் செய்யப்படும் பொருட்கள், கோயில் ஆபரணங்கள் ஆகியவை நாஞ்சில் மண்ணின்  சிறப்பு. இவை விரைவில் உலக அளவில் பிரபலமடைய போகிறது. முந்தைய  அரசு கடலோர பகுதியை பற்றி கவலைப்படவில்லை. கடற்கரையை அபிவிருத்தி செய்ய  மூன்று அடிப்படை திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். துறைமுகம் சார்ந்த  வளர்ச்சி, நவீன உள் கட்டமைப்பு வளர்ச்சி, புதிய துறைமுகங்களை அமைத்தல்.

நம்  துறைமுகங்கள் வளர்ச்சியடைய போகின்றன. நீல பொருளாதாரம் என்ற கடல் சார்ந்த  பொருளாதாரத்துக்கு பெரும் முக்கியத்துவம் தருவதால் மீனவர்களின் வருவாய்  அதிகரிக்கும். புதிய மீன்பிடி துறைதுறைமுகங்கள், மீன்களை இறக்கும் மையங்கள்  அமைக்கப்படும். சென்னையில் புதிய துறைமுகம் அமைக்கப்படுகிறது. அதில்  சிறந்த படகுகள், கடலில் போகும் உபகரணங்கள், கடல்பாசி வளர்க்கும் திட்டம்  ஆகியவற்றை ஊகுவிக்கிறோம். மீனவர்களுக்காக 20 ஆயிரம் கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பே நம் அரசின் முன்னுரிமை. கடந்த  சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து 40 மீனவர்களையும் நான்கு  படகுகளையும் மீட்டு வந்தோம். எந்த ஒரு மீனவரும், படகும் இப்போது இலங்கை  அரசின் காவலில் இல்லை.மூன்றாவதாக மீன் விற்க நிறைய தடைகள் உள்ளன. சிறந்த சாலை, உள்நாட்டு நீர்வழி  போக்குவரத்து ஆகியவற்றின் தடைகளை நீக்க சாத்தியபடும் இடங்களில் சாலை,  நீர்வழிகளும் அமைக்கப்படும். மீனவர்கள் வாழ்க்கை எளிதாகவும், வளமாகவும்  இருக்கும். மீனவர்களுக்கு மீன்பிடித்திட்டங்களும், உணவு பதப்படுத்தும்  திட்டங்களும் அமைக்கப்படும். மீனவர்களுக்காக தனி அமைச்சகம் மூலம்  மீனவர்களின் வளர்ச்சிக்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. வரும் 6ம் தேதி எங்களை  ஆசீர்வதியுங்கள். என் தோழர் பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற இடைத்தேர்தலில்  போட்டியிடுகிறார். அவரை அன்றைய தினம் ஆசீர்வதியுங்கள். அவருடன்  நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் நாடாளுமன்றத்தில்  உங்களின் குரலாக ஒலிக்கக்கூடியவர். எனவே அவரை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

திருவள்ளுவர் சிலை பெருமையை பேசிய மோடி

* பிரதமர் பேச்சின் தொடக்கத்தில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையின் பெருமை குறித்தும் பேசினார். மேலும் ஹெலிகாப்டரில் பறந்தவாறு திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் அழகை படம் பிடித்து தனது முக நூலில் பதிவிட்டுள்ளார்.

* கருப்பு கலர் முக கவசம் அணிந்தவர்களுக்கு பொதுக்கூட்ட மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. மாற்று முக கவசம் வழங்கி பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

* மோடியின் ஆங்கில உரையை, மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி மொழியாக்கம் செய்தார்.

* மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், பா.ஜ. நிர்வாகிகள் தர்மராஜ், உமாரதி, மீனாதேவ், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன், தமாகா தலைவர் டி.ஆர். செல்வம் உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர்.

வைகுண்டர், காமராஜரை நினைவு கூர்ந்த பிரதமர்

நரேந்திரமோடி  பேசுகையில், நாகர்கோவிலுக்கு நான்  வந்திருப்பதால் இந்த மண்ணின் நாஞ்சில் பொருணன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, செண்பகராமன்  பிள்ளை, அய்யா வைகுண்டர், தாணுலிங்க நாடார்,  காமராஜர், மார்ஷல் நேசமணி ஆகியோரது மண்ணில் நான் நிற்கிறேன். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், அருள்மிகு நாகராஜா கோவில், திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவை உலக மக்களை கவர்ந்துள்ளது.

இன்று புனித வெள்ளி. இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும், அவர் எளியமக்களுக்கு ஆற்றிய பணியையும் நினைவு கூறுகிறேன் என்றார்.

சரக்கு பெட்டகம் வேண்டாம்

பிரசார பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் பேசியதாவது : பிரதமர் மோடியிடம், குமரி மாவட்ட மக்களின் சார்பில் இரு கோரிக்கைகள் வைக்கிறேன். ஒன்று கன்னியாகுமரியில் மீனவர்களின் நலனுக்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட வேண்டும்.  கன்னியாகுமரியில் சரக்கு பெட்டகம் வேண்டாம் என ஏற்கனவே முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் வலியுறுத்தினர். எனவே இரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.   கூட்டத்தில், நாகர்கோவில் தொகுதி பா.ஜ. வேட்பாளர் எம்.ஆர். காந்தி, கிள்ளியூர் தொகுதி தமாகாவேட்பாளர் ஜூட் தேவ் , விளவங்கோடு தொகுதி பா.ஜ. வேட்பாளர் ஜெயசீலன் குளச்சல் தொகுதி பா.ஜ. வேட்பாளர் ரமேஷ், பத்மநாபபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜாண் தங்கம்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி கன்னியாகுமரி மக்களவை  தொகுதி பா.ஜ. வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது : கடந்த 2014 முதல் 19ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் ₹48 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு தந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி குமரியில் இருந்தது.  நாட்டின் கடைகோடி பகுதியான கன்னியாகுமரி, பாரத நாட்டின் பாதம் போன்றது. எனவே எல்லா வசதிகளும் இங்கு வர வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். எனவே எல்லா விதத்திலும் குமரி மாவட்டம் வளர்ச்சி பெறும் திட்டங்களை பிரதமர் அறிவித்து செயல்படுத்தினார். குஜராத் முதல்வராக  மோடி இருந்த போதே இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு என்னிடம் பேசுவார். மோடி பிரதமராக வந்த பின்னர் தான் மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>