தூத்துக்குடியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், ஊர்காவல் படையினர் தபால் வாக்கு

தூத்துக்குடி,ஏப்.3: தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் தபால் வாக்கு செலுத்தினர். இதனை மாவட்ட  தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் படைவீரர்கள், முன்னாள் காவலர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்தது.  தபால் வாக்குப்பதிவு நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அன்று காவல்துறையினர் 2130 நபர்கள், தீயணைப்புத் துறையினர் 31 நபர்கள், ஊர்க்காவல் படையினர் 298 நபர்கள், முன்னாள் படைவீரர்கள் 208 நபர்கள், முன்னாள் காவல்துறையினர் 82 நபர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 148 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவர்கள் தபால் வாக்கு அளிக்க கடந்த 26ம் தேதி  முகாம் நடைபெற்றது.  அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர். தபால் வாக்கு செலுத்தாதவர்கள் வாக்கு செலுத்தும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தேர்தல் பணியாற்ற உள்ள காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தபால் வாக்கு செலுத்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் முறையாக பதிவு செய்யப்பட்டு வாக்கு செலுத்தப்பட்டு உறையில் வைக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் என பெட்டியில் போடப்படுகிறது என தெரிவித்தார். ஆய்வின்போது டிஆர்ஓ கண்ணபிரான், தேர்தல் தாசில்தார் ரகு மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

Related Stories:

>